/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் பிரச்னை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் பிரச்னை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் பிரச்னை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
அரசு மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் பிரச்னை கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : நவ 14, 2024 04:28 AM

வால்பாறை: வால்பாறை, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தண்ணீர் வினியோகம் இல்லாததால், பள்ளி மாணவியர் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
வால்பாறை நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 280 மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம், அங்கன்வாடி மையம் செயல்படுகின்றன.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பள்ளியில் தண்ணீர் வினியோகம் இல்லாததால், சத்துணவு மையத்திற்கும், அங்கன்வாடி மையத்திற்கும் சமைக்க தண்ணீர் இன்றி ஊழியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதே போல், பள்ளியில் குழாயில் தண்ணீர் வராததால் மாணவியர் கை கழுவக்கூட முடியாமல் அவதிக்குள்ளாகின்றனர். பள்ளியில் குடிநீருக்காக அமைக்கப்பட்ட மோட்டார் கடந்த சில நாட்களாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதனால், குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் திறந்து விடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பழுதடைந்த மோட்டார் சரி செய்ய பள்ளி நிர்வாகம் தொடர்ந்து தயக்கம் காட்டுவதால், மாணவியர் அவதிக்குள்ளாவது தொடர்கிறது.
சத்துணவு பணியாளர்கள் கூறியதாவது:
பள்ளியில் தண்ணீர் வினியோகம் இல்லாததால், அருகில் உள்ள பள்ளியில் இருந்து குடத்தில் தண்ணீர் கொண்டு வந்து சமைக்கிறோம். சத்துணவு மையத்திற்கு தனி பைப் லைன் வேண்டும், என, பல மாதங்களாக நகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, சத்துணவு மையத்தில் மின் இணைப்பு கூட வழங்கப்படவில்லை. இதனால், மாணவியருக்கு மதிய உணவு இருட்டில் சமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இவ்வாறு, கூறினர்.
பள்ளி மாணவியர் கூறுகையில், 'பள்ளியில் கடந்த சில நாட்களாகவே தண்ணீர் முறையாக வருவதில்லை. இதனால் குடிக்க கூட வீட்டில் இருந்து தான் தண்ணீர் கொண்டுவருகிறோம். மதிய உணவு சாப்பிட்டு கை கழுவக்கூட தண்ணீர் கிடைப்பதில்லை. குறிப்பாக, மாணவியர் அதிக அளவில் படிக்கும் பள்ளியில் கழிப்பிடத்திற்கு கூட முறையாக தண்ணீர் வருவதில்லை,' என்றனர்.
தலைமை ஆசிரியை ஜெயலட்சுமியிடம் கேட்ட போது, ''பள்ளியில் மோட்டார் பழுதானதால் குடிநீர் பிரச்னை கடந்த சில நாட்களாக உள்ளது. பழுதான மின் மோட்டார் விரைவில் சரி செய்யப்படும்.
தண்ணீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், சத்துணவு மையத்திற்கு தனியாக பைப் லைன் வழங்க வேண்டும், என, நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி சார்பில் பைப் லைன் தனியாக வழங்கினாலே இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்,'' என்றார்.