டெங்குவுக்கு வைக்கணும் ‘செக்’ வீடுவீடாக அதிகாரிகள் ஆய்வு
டெங்குவுக்கு வைக்கணும் ‘செக்’ வீடுவீடாக அதிகாரிகள் ஆய்வு
ADDED : செப் 23, 2026 03:52 PM
கருமத்தம்பட்டி: கருமத்தம்பட்டி நகராட்சி பகுதிகளில், 33 பணியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிந்து, கொசு ஒழிப்பு பணிகளில், முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
கருமத்தம்பட்டி நகராட்சியில் உள்ள 27 வார்டுகளில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். ஏராளமான விசைத்தறி கூடங்கள் மற்றும் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையில், நகராட்சி தலைவர் மனோகரன் மற்றும் கமிஷனர் பாரதி ஆகியோர் தடுப்பு நடவடிக்கைகளை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். 33 பணியாளர்கள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டு, வீடுகள், வணிக வளாகங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
நீர் சேமிக்கும் தொட்டிகளில், கொசுப்புழுக்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து, மருந்து தெளித்தனர். எலச்சிபாளையம் பகுதியில், நீர் தேங்கும் வகையில் இருந்த, தேவையற்ற டயர்கள், தேங்காய் தொட்டி, பிளாஸ்டிக் பொருட்கள், கண்ணாடி பாட்டில்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தினர். வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகள், தொழிலாளர் குடியிருப்புகளில் துாய்மை பராமரிக்கவும், சுற்றுப்புறத்தை வாரத்துக்கு ஒருமுறை ஆய்வு செய்து கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில், துாய்மையாக வைத்திருக்க நகராட்சி நிர்வாகம் கட்டாயமாக்கி உள்ளது. ஆய்வின் போது, சுகாதாரமின்றி இருந்தால், அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
