UPDATED : அக் 09, 2026 05:17 PM
ADDED : அக் 09, 2026 05:14 PM

பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே தொட்டிபாளையம் ரோட்டில், சுவாமி உருவப்படங்கள் குப்பையாக கொட்டி கிடப்பதால், பக்தர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
பெரியநாயக்கன்பாளையம் அருகே வெள்ளமடை ஊராட்சிக்குட்பட்ட தொட்டிபாளையம் செல்லும் ரோட்டில், வேலி ஓரம் உள்ள மரத்துக்கு கீழ், நூற்றுக்கணக்கான சுவாமி படங்கள் குப்பையாக கொட்டிக் கிடக்கின்றன.
சமூக ஆர்வலர் காளிபாளையம் அன்பு செல்வன் கூறியதாவது:
இது, மத உணர்வுகளையும், பொதுமக்களின் மனதையும் பாதிக்க கூடிய சம்பவம். உள்ளாட்சி அமைப்புகள் இதை கண்டும், காணாமல் இருப்பதை கைவிட்டு, கடவுள் உருவப்படங்களை சேகரித்து அகற்றலாம். காகிதம் மற்றும் மறு சுழற்சி செய்யக்கூடிய பொருட்களை பிரித்து, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற முறையில் அகற்றலாம். கடவுள் உருவப்படங்களை ரோட்டில் வீசுவதை தடுத்து, கோவில்கள் அருகே தனி பெட்டிகள் வைத்து அதில் சேகரிக்கலாம். வீடுகளில் உள்ள பழைய சுவாமி படங்களை ஊராட்சி நிர்வாகம் வாயிலாக சிறப்பு சேகரிப்பு முகாம் நடத்தி, குறிப்பிட்ட நாளில், பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். ரோட்டோரம் சுவாமி உருவப்படங்களை வீசும் பழக்கத்தை கைவிட, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். மேலும், இதே பகுதியில் அறிவிப்பு பலகை வைக்க, உள்ளாட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
