UPDATED : நவ 13, 2026 07:36 PM
ADDED : நவ 13, 2026 07:36 PM
உடுமலை: உடுமலையில், கட்டுமான பணியின் போது, சென்ட்ரிங் சரிந்து விழுந்த விபத்தில் ஒருவர் இறந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
உடுமலை அருகேயுள்ள குரல்குட்டையில், ஜெயபால் என்பவருக்கு சொந்தமான புதிய வீட்டு மனை அமைக்கும் பகுதியில், நுழைவாயில் ‘ஆர்ச்’ அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
கான்கிரீட் வளைவு அமைக்கும் பணியின் போது, சென்ட்ரிங் தாங்காமல் சரிந்து விழுந்தது. இதில், குரல்குட்டையைச்சேர்ந்த, ஆறுமுகம், 67, தளியைச்சேர்ந்த, விக்னேஷ்,37, ஜார்கன்ட் மாநிலத்தைச்சேர்ந்த, ஜித்துார்,27, துர்கேஷ்,27 ஆகியோர் காயமடைந்தனர்.
நான்கு பேரும், உடுமலையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், பலத்த காயமடைந்திருந்த ஆறுமுகம், சிகிச்சை பலனின்றி இறந்தார். மூன்று பேர் சிகிச்சையில் உள்ளனர். உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
