ADDED : செப் 19, 2025 09:16 PM
தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் பேரூராட்சிக்கு உட்பட்ட கெம்பனுார், அண்ணா நகரில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்துக்கு, 21, 21பி, 94ஏ, 64டி என்ற வழித்தடம் எண் கொண்ட 4 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
இதில், 21 என்ற வழித்தட எண் கொண்ட அரசு பஸ் மட்டும், ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள் பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பிச் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
தெற்கு ஆர்.டி.ஓ. மற்றும் வருவாய்த்துறையினர், போலீசார், போக்குவரத்து கழகத்தினர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். 'தங்கள் பகுதிக்கு, 21 என்ற வழித்தடம் கொண்ட பஸ் இயக்குவதில்லை. கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்' என அப்பகுதியினர் வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து, செப்., 3ல், 21சி வழித்தட எண் கொண்ட அரசு பஸ் பகல் 1 மணிக்கு வந்து செல்லும் சேவை துவக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, நேற்று முதல் பகல் 2 மணிக்கு, 64சி வழித்தட எண் கொண்ட அரசு பஸ் சேவை துவங்கியது.
புதிய பஸ் சேவையை, தெற்கு ஆர்.டி.ஓ. மாருதிபிரியா மற்றும் பேரூர் தாசில்தார் சேகர் ஆகியோர் துவக்கி வைத்தனர்.