/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளிகளுக்காக 'ஒன் ஸ்டாப் சென்டர்'; கோவையில் 23 மையங்கள் அமைகிறது
/
மாற்றுத்திறனாளிகளுக்காக 'ஒன் ஸ்டாப் சென்டர்'; கோவையில் 23 மையங்கள் அமைகிறது
மாற்றுத்திறனாளிகளுக்காக 'ஒன் ஸ்டாப் சென்டர்'; கோவையில் 23 மையங்கள் அமைகிறது
மாற்றுத்திறனாளிகளுக்காக 'ஒன் ஸ்டாப் சென்டர்'; கோவையில் 23 மையங்கள் அமைகிறது
ADDED : மே 01, 2025 11:51 PM
கோவை; தமிழ்நாடு உரிமைத்திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில், 23 'ஒன் ஸ்டாப் சென்டர்'கள் அமைக்கப்படுகின்றன.
மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்கள் அலைக்கழிப்பதை தடுக்கும் வகையிலும் அனைத்து வகையான உதவிகளும் அந்தந்த பகுதிகளில் கிடைப்பதற்காக, தமிழ்நாடு உரிமைத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
கோவை மாவட்டத்தில், 27 ஆயிரத்து, 538 மாற்றுத்திறனாளிகள், 21 வகையான பிரிவுகளின் கீழ் உள்ளனர். இவர்கள், அடிப்படை தேவைகளுக்கு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் பிரிவுக்கு வர வேண்டியுள்ளது. சில பயிற்சிகளுக்கு அலைக்கழிப்புக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 'ஒன் ஸ்டாப் சென்டர்' வாயிலாக பல்வேறு உதவிகள் மற்றும் பயிற்சிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை திட்ட அலுவலர் சுந்தரேஸ்வரன் கூறியதாவது:
'ஒன் ஸ்டாப்' மையங்களில் அடையாள அட்டை எடுப்பது, ரேஷன் அட்டை பெறுதல், பிற இ-சேவை மையம் சார்ந்த உதவிகள், உபகரணங்களுக்கு விண்ணப்பிப்பது, பேச்சு பயிற்சி, பிசியோ பயிற்சி உள்ளிட்ட, 16 வகையான சேவை அளிக்கப்படுகிறது.
'ஒன் ஸ்டாப் சென்டர்' அமைக்க, சுகாதாரத்துறை, மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை என பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்படாமல், காலியாகவும் இருந்த கட்டடங்கள் தேர்வு செய்யப்பட்டு, பராமரிப்பு பணிகள் செய்யப்படுகின்றன. 23 மையங்கள் அமைக்க, இதுவரை, 22 இடங்கள் தேர்வு செய்துவிட்டோம். இம்மாதம் இம்மையங்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளன.
இவ்வாறு, அவர் கூறினார்.

