/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊட்டி உருளை கிழங்கிற்கு மவுசு கூடுது...30 சதவீதம் உற்பத்தி அதிகரிப்பு
/
ஊட்டி உருளை கிழங்கிற்கு மவுசு கூடுது...30 சதவீதம் உற்பத்தி அதிகரிப்பு
ஊட்டி உருளை கிழங்கிற்கு மவுசு கூடுது...30 சதவீதம் உற்பத்தி அதிகரிப்பு
ஊட்டி உருளை கிழங்கிற்கு மவுசு கூடுது...30 சதவீதம் உற்பத்தி அதிகரிப்பு
ADDED : நவ 20, 2025 05:19 AM

மேட்டுப்பாளையம்: ஊட்டி உருளை கிழங்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 சதவீதம் உற்பத்தி அதிகரித்துள்ளது. மேலும் மவுசும் கூடியுள்ளது.
மேட்டுப்பாளையம் நெல்லித்துறை சாலையில், நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேட்டுப்பாளையம் கிளை செயல்பட்டு வருகிறது. நீலகிரி மாவட்டம் கேத்தி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, உற்பத்தி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் இச்சங்கத்தின் விற்பனைக் கூடம் வாயிலாக தரம் பிரிக்கப்பட்டு தினமும் ஏலம் விடப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சங்கத்துக்கு ஊட்டி மட்டுமல்லாமல் வெளிமாநிலங்களில் இருந்தும் உருளை கிழங்கு விற்பனைக்கு வருகின்றன. ஆனால் அவற்றை விட ஊட்டி உருளை கிழங்கிற்கு தனி மவுசு உள்ளது. இதனால் வியாபாரிகள் இவற்றை அதிக விலை கொடுத்தும் வாங்கவும் தயாராக உள்ளனர். தரமான ஊட்டி உருளைக்கிழங்குகள் தூத்துக்குடிக்கு துறைமுகம் வழியாக மாலத்தீவு, இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டில் மூட்டை ஒன்று அதிகபட்சமாக ரூ.4,600 வரை ஏலம் எடுக்கப்பட்டது.
இதுகுறித்து நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் மேலாளர் நிசார் கூறியதாவது:-
கடந்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் நவம்பர் 17ம் தேதி வரை, 10 ஆயிரத்து 858 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கும், நடப்பு ஆண்டில் அதே கால கட்டங்களில் 14 ஆயிரத்து 89 மெட்ரிக் டன் உருளைக்கிழங்கும் விற்பனைக்கு வந்துள்ளன. இவை ரூ. 38 கோடியே 39 லட்சத்து 91 ஆயிரத்து 505க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. உற்பத்தியும் 30 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேலும், எங்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தின் உருளைக்கிழங்கு விதைகளை பயன்படுத்தி விவசாயம் செய்ததால், மகசூலும் கூடியுள்ளது.
ஊட்டி உருளைக்கிழங்குகளை வாங்க வியாபாரிகள் போட்டி போடுகின்றனர். கேரளா மற்றும் வெளிநாடுகளில் ஊட்டி கிழங்குகளுக்கு மவுசு கூடியுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
---இங்குள்ள கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு நேற்று 1400 மூட்டைகள் ஊட்டி உருளைக்கிழங்கு வரத்து வந்தது. 45 கிலோ எடை கொண்ட ஒரு மூட்டை ஊட்டி உருளை அதிகபட்சமாக ரூ.1,800 வரை விற்பனை ஆனது.

