/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முழு நேர கிளை நுாலக புதிய கட்டடம் திறப்பு
/
முழு நேர கிளை நுாலக புதிய கட்டடம் திறப்பு
ADDED : ஏப் 28, 2025 11:00 PM
பொள்ளாச்சி ;பொள்ளாச்சி மரப்பேட்டையில், பொது நுாலகத்துறைக்கு சொந்தமான கிளை நுாலகம், 12 சென்ட் இடத்தில் கடந்த, 1954ல் அமைக்கப்பட்டது. ஒரு லட்சம் நுால்கள், 16 ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட நுாலகமாக செயல்படுகிறது.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் செயல்படும், 40 ஊர்ப்புற, பகுதிநேர மற்றும் கிளை நுாலகங்களின் ஊதிய மையமாகவும் உள்ளது. 69 ஆண்டுகளாகிய நுாலகத்தின் கட்டடம் பழமையின் காரணமாக மழைக்கு ஒழுகியதுடன் பரிதாபமான நிலைக்கு மாறியது.
நீண்ட கால போராட்டத்துக்கு பின் கடந்த, 2019ம் ஆண்டு நுாலகம் பழைய குடிமைப்பொருள் வழங்கல் துறை அலுவலகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டது.இந்நிலையில், புதிய கட்டடம் கட்டுவதற்காக கடந்த, 2023ம் ஆண்டு செப்., மாதம் பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கப்பட்டது.
அதன்பின், நுாலகத்துறை சார்பில், ஒரு கோடி ரூபாய் செலவில் தரைதளம், முதல் தளத்துடன், கட்டடம் கட்டும் பணிகள் நடந்தது. இப்பணிகள் நிறைவடைந்த நிலையில் பயன்பாட்டுக்காக திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், நேற்று முன்தினம் கோவை வந்த துணை முதல்வர் உதயநிதி, காணொலி வாயிலாக நுாலக கட்டடத்தை திறந்து வைத்தார்.திறப்பு விழாவில் கவுன்சிலர் சாந்தலிங்கம், வாசகர்கள், பொதுமக்கள், போட்டித்தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள், நுாலகர்கள் பங்கேற்றனர்.

