/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் ஆக்கிரமிப்பு: மீட்பதில் அரசு துறைகளிடையே இல்லை ஒத்துழைப்பு!
/
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் ஆக்கிரமிப்பு: மீட்பதில் அரசு துறைகளிடையே இல்லை ஒத்துழைப்பு!
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் ஆக்கிரமிப்பு: மீட்பதில் அரசு துறைகளிடையே இல்லை ஒத்துழைப்பு!
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் ஆக்கிரமிப்பு: மீட்பதில் அரசு துறைகளிடையே இல்லை ஒத்துழைப்பு!
UPDATED : ஏப் 07, 2023 08:07 AM
ADDED : ஏப் 07, 2023 08:05 AM
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், பல கோடி ரூபாய் மதிப்பிலான ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. அரசு துறை அதிகாரிகளுக்கிடையே போதிய ஒத்துழைப்பு இல்லாததால், இந்த நிலங்களை அதிகாரம் மிக்கவர்கள், அரசியல் கட்சியினர் ஆக்கிரமிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றை அடையாளம் கண்டு மீட்பதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார், உத்திரமேரூர், வாலாஜாபாத், காஞ்சிபுரம் ஆகிய ஐந்து ஒன்றியங்களில், 274 ஊராட்சிகள் உள்ளன. இங்கு, டி.டி.சி.பி., - சி.எம்.டி.ஏ., அங்கீகாரமற்ற வீட்டுமனை ஆகிய மனைப்பிரிவுகள் அமைத்து, நிலங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,210 நகர் ஊரமைப்பு இயக்க வீட்டு மனைகள், 165 சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும வீட்டு மனைகள், 834 அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என, மொத்தம் 2,209 வீட்டு மனைப் பிரிவுகள் உள்ளன.
எந்த ஒரு வீட்டு மனை பிரிவு போட்டாலும், சாலைகள், ஓ.எஸ்.ஆர்., என அழைக்கப்படும் திறந்தவெளி ஒதுக்கீடு காலி நிலங்கள் என, மனைப்பிரிவு போடும் நிறுவனம் ஒதுக்கீடு செய்து கொடுக்க வேண்டும் என, வழிகாட்டியில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதன்படி, காஞ்சிபுரம் ஒன்றியத்தில், 120.35 ஏக்கர், வாலாஜாபாத் ஒன்றியத்தில், 357.05 ஏக்கர். உத்திரமேரூர் ஒன்றியத்தில், 35.33 ஏக்கர்.
ஸ்ரீபெரும்புதுார் ஒன்றியத்தில், 810.35 ஏக்கர். குன்றத்துார் ஒன்றியத்தில், 811.14 ஏக்கர் என, மொத்தம் 2,134.22 ஏக்கர் நிலம் திறந்தவெளி நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இதில், 1,242 மனைப்பிரிவுகளில் பதிவு செய்து, திறந்தவெளி நிலத்திற்கு, வருவாய்த் துறையிடம் பட்டா கேட்டு, ஊரக வளர்ச்சித் துறையினர் விண்ணப்பித்து உள்ளனர்.
மேலும், 967 மனைப்பிரிவுகளில், நிலங்கள் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சித் துறையினரிடம், தானப்பத்திரம் பதிவு செய்து கொடுக்கப்படாமல் உள்ளன. இவ்வாறு மனைப்பிரிவுகள் தனியாரால் உருவாக்கும்போது, அதில் 10 சதவீதம் நிலம் ஓ.எஸ்.ஆர்., எனப்படும் திறந்தவெளி பொது இடமாக, அரசுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
இந்த ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் தானம் பெற்று, அந்தந்த ஊராட்சி பெயரில் பட்டா பெற வேண்டும். இவ்வாறு பெறப்படும் ஓ.எஸ்.ஆர்., நிலத்தில், பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்படும்.
இந்நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில், கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 2,200 ஏக்கர் ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில், 1,500 ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி, வருவாய்த் துறைக்கு, ஊரக வளர்ச்சித் துறை சார்பில் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதில், 32 ஓ.எஸ்.ஆர்., நிலங்களுக்கு மட்டும் பட்டா வழங்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான ஓ.எஸ்.ஆர்., நிலங்கள் அடையாளப்படுத்தப்படாமல் உள்ளதால், அவை தனியார் ஆக்கிரமிப்பில் உள்ளன. இந்த நிலங்களை முழுமையாக அடையாளம் கண்டு, மீட்டு, ஊராட்சி பெயரில் பட்டா பெற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
இதுபோன்ற மனைப்பிரிவுகளில், அதிகாரம் மிக்க தனிநபர்கள் மற்றும் பல்வேறு கட்சியினர் என, பல தரப்பினர் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது.
எனவே, உள்ளாட்சி நிர்வாகங்களில் ஏற்படுத்தியுள்ள வீட்டு மனைப் பிரிவுகளில், திறந்தவெளி நிலத்தை முறையாக தானப்பத்திரம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் இடையே கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
நகர் ஊரமைப்பு இயக்கம் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் அனுமதிக்கப்பட்ட வீட்டு மனைப் பிரிவு காலி நிலங்கள் பதிவு செய்து, வருவாய்த் துறையிடம் பட்டா கோரப்பட்டு உள்ளது.
இதில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைப் பிரிவுகளில் இருக்கும் வீட்டு மனைப் பிரிவு நிறுவனங்களை அழைத்து, தானப்பத்திரம் முறையாக பத்திரப்பதிவு பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒருங்கிணைப்பு தேவை
ஓ.எஸ்.ஆர்., நிலங்கள், அரசு நில உடைமை ஆவணத்தில் முறையாக பதிவு செய்யப்படாததால், கிராம நில வரைபடத்தில் அவை காண்பிக்கப்படுவதில்லை. இதனால், புதிதாக ஒருவர் நிலம் வாங்கும் போது, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை, மோசடி நபர்களிடம் இருந்து தவறுதலாக வாங்கும் நிலை உள்ளது.வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித் துறை, பத்திரப்பதிவு துறை, நில அளவையர், டி.டி.சி.பி., ஆகிய துறை சார்ந்த அலுவலர்களிடம் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், ஓ.எஸ்.ஆர்., நிலங்களை அடையாளம் காண்பதிலும், ஆவணம் சேகரிப்பதிலும் நடைமுறை சிக்கல் உள்ளது.இந்த ஐந்து துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றினால் மட்டுமே, ஓ.எஸ்.ஆர்., நிலங்களை மீட்டு, பாதுகாக்க முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.