ADDED : மார் 28, 2026 05:06 PM

பீளமேடு: பீளமேடு மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில் மாணவர்களிடையே சேமிப்பு, சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், 'அடுப்பில்லா தின்பண்டங்கள்' தயாரிப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தற்போதைய சூழலில் காஸ் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஒரு சவாலாக உள்ளது. இதை எதிர்கொள்ளும் விதத்தில் சிறு வயது முதலே மாணவர்களுக்கு தற்சார்பு வாழ்க்கை முறையை கற்றுக்கொடுக்கும் விதமாகவும் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதில் மாணவர்கள் தீ மூட்டாமல், சத்தான தின்பண்டங்களை செய்வது எப்படி என்று ஆர்வத்துடன் கற்றுக்கொண்டனர்.
பள்ளி தலைமையாசிரியர் சகுந்தலா கூறுகையில், ''பணம் சேமிப்பதில் மட்டும் சிக்கனம் காட்டினால் போதாது. அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் எரிபொருள் உள்ளிட்ட அனைத்து வளங்களிலும் சிக்கனத்தை கடைபிடிப்பது அவசியம். இதை மாணவர்களுக்கு புரிய வைக்க விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடத்தி வருகிறோம்,'' என்றார்.

