/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதுசு வந்ததால் குப்பையான பழசு; ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம்
/
புதுசு வந்ததால் குப்பையான பழசு; ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம்
புதுசு வந்ததால் குப்பையான பழசு; ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம்
புதுசு வந்ததால் குப்பையான பழசு; ஊராட்சி நிர்வாகங்கள் அலட்சியம்
ADDED : செப் 23, 2025 10:40 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு ஒன்றியத்தில் இயங்கி வந்த பேட்டரி வாகனங்கள் சர்வீஸ் செய்யாததால் குப்பையாகும் நிலையில் உள்ளது.
கிணத்துக்கடவு ஒன்றிய கிராமப்பகுதிகளில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தினமும் தூய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்து வந்தனர். பணியை விரைந்து முடிக்க ஒன்றிய நிர்வாகம் சார்பில், 2019ம் ஆண்டு குப்பையை சேகரிக்க பேட்டரி வாகனம் வழங்கப்பட்டது.
இதன் வாயிலாக, குப்பை சேகரிக்கப்பட்டு வந்தது. அதன் பின், ஒரு சில ஊராட்சிகளில், இந்த பேட்டரி வாகனங்களை முறையாக பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்தது. இதை சரி செய்யாமல் ஆங்காங்கே கிடப்பில் போடப்பட்டது. ஒரு சில ஊராட்சிகளில் பழுதடையும் நிலையில் இந்த வாகனங்கள் உள்ளது.
கடந்த மாதம் கோவில்பாளையத்தில் நடந்த, 'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 20 பேட்டரி வாகனங்கள், தலா 2 லட்சத்து 27 ஆயிரத்து 147 ரூபாய் மதிப்பீட்டில், 12 ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டது.
அதன்பின், சில ஊராட்சிகளில் இந்த புதிய வாகனத்தில் குப்பை சேகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பழைய பேட்டரி வாகனங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளது. தற்போது இந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருக்கும் இடத்தில் புதர் முளைத்து காணப்படுகிறது.
இந்த வாகனங்களை சரி செய்ய ஊராட்சி நிர்வாகத்தினர் ஆர்வம் காட்டுவதில்லை. புதிய வாகனம் வந்தபின் பழைய வாகனத்தை கைவிட்டுள்ளனர்.
எனவே, ஒன்றிய அதிகாரிகள் ஊராட்சியில் பழுதடைந்த நிலையில் இருக்கும் பேட்டரி வாகனங்களை ஆய்வு செய்து, அவற்றை சர்வீஸ் செய்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும், என மக்கள் வலியுறுத்துகின்றனர்.