/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.ஏ.பி., கால்வாய் புனரமைக்கணும்!
/
பி.ஏ.பி., கால்வாய் புனரமைக்கணும்!
ADDED : பிப் 22, 2024 05:27 AM
திருமூர்த்தி அணையில் இருந்து, வெள்ளகோவில் வரை, 123 கி.மீ., நீளமுள்ள பி.ஏ.பி., பிரதான கால்வாயை முழுவதுமாக புனரமைத்து, கொள்ளளவை அதிகரிக்க வேண்டும் என, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன் வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் எம்.எல்.ஏ., பொள்ளாாச்சி ஜெயராமன் பேசியதாவது:
பி.ஏ.பி., திட்டத்தில், வடசித்துார் கிளை கால்வாய் வாயிலாக, இரு மண்டலத்துக்கு தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது.
அதன்படி, ஒவ்வொரு மண்டலத்திலும், 5,080 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த மண்டலத்துக்கான தண்ணீர் வினியோகம் சமீபத்தில் நிறைவடைந்தது. அப்போது, கடைக்கோடி பாசன நிலங்களுக்கு தண்ணீர் சென்றடையவில்லை.
இதற்கு, கால்வாய் சிதில மடைந்து, தண்ணீர் வீணாக வழிந்தோடுவதே காரணமாகும். வரும் ஆக., மாதம் திருமூர்த்தி அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் முன், வடசித்துார் கிளை கால்வாயை முழுமையாக சீரமைக்க வேண்டும். கடைமடைக்கு தண்ணீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
பி.ஏ.பி., திட்டம், 60 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது. திருமூர்த்தி அணையில் இருந்து வெள்ளகோவில் வரை, 123 கி.மீ., நீளமுள்ள பிரதான கால்வாயை முழுவதுமாக புனரமைத்து, நீர் கொள்ளளவை அதிகரிக்கச் செய்ய வேண்டும்.
தற்போது, விநாடிக்கு, 1,100 கனஅடி தண்ணீர் கால்வாயில் செல்கிறது. அதனை அதிகரிக்கச் செய்யவும், கிளை வாய்க்கால்களில் முழுமையாக கம்பி கட்டி, கான்கிரீட் அமைத்து, பாசன நிலங்களுக்கும் தண்ணீர் சென்றடையும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, பொள்ளாச்சி ஜெயராமன் பேசினார்.
இதற்கு, பதில் அளித்த நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன், 'வடசித்துார் கிளை வாய்க்கால், ஏற்கனவே துார்வாரப்பட்டுள்ளது. அதில், இரு பகுதிகள் வாயிலாக, 10,155 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. ஒரு பகுதி, கடந்த, 2022-23ம் ஆண்டில், 17 லட்சம் ரூபாய் மதிப்பில் துார்வாரப்பட்டது. நடப்பு நிதியாண்டில் மற்றொரு பகுதி துார்வாரப்படும்.
பி.ஏ.பி.,யின் மொத்த கால்வாயையும் சுத்தப்படுத்தி புனரமைக்க, 17 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயாராகியுள்ளது. அரசு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.- நமது நிருபர் -