/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளில்லை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பெற்றோர் மனு
/
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளில்லை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பெற்றோர் மனு
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளில்லை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பெற்றோர் மனு
அரசு பள்ளியில் அடிப்படை வசதிகளில்லை: முதல்வர் தனிப்பிரிவுக்கு பெற்றோர் மனு
ADDED : டிச 18, 2025 07:35 AM

நெகமம்: நெகமம், தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.
நெகமம் அருகே உள்ள, தாசநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் உள்ள கழிப்பிடத்தை மாணவர்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடாமல், பள்ளி வளாகத்திற்கு வெளியே உள்ள பொது இடத்தை பயன்படுத்த வேண்டும் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மழை காலங்களில், பள்ளி வகுப்பறைகளில் மழைநீர் ஒழுகுவதால் மாணவர்கள் அமர முடியாத நிலை உள்ளது. பள்ளி வளாகத்தில் குடிநீர் தொட்டி இருந்தும், இன்று வரையிலும் அங்கு குடிநீர் இல்லை. இதனால் மாணவர்கள் வீட்டிலிருந்தே குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது.
இது மட்டுமின்றி கடந்த நான்கு மாதங்களாக, பள்ளி கட்டடத்தில் இருந்த மின் ஒயர்கள் கீழே தொங்கிய நிலையில் உள்ளது. இது போன்று மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை என, பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் முறையிட்டுள்ளனர்.
இதைத்தொடர்ந்து, ஒன்றிய அதிகாரிகள் அப்பள்ளிக்கு நேரில் சென்று பள்ளி வளாகத்தில் உள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தனர்.
பெற்றோர் கூறியதாவது:
பள்ளியில் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் குறைவாகவே உள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், தினமும் வெயிலில் வைத்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கப்படுகிறது.
எஸ்.எம்.சி., கூட்டங்கள் நடத்தப்படுவது கிடையாது. பள்ளி வளாகத்தில் இருக்கும் அங்கன்வாடி மையம் கடந்த மூன்று நாட்களாக திறக்கவில்லை. இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டாலும் பதில் இல்லை.
மேலும், பள்ளி வளாகத்தில் அதிகளவு புதர் செடிகள் முளைத்துள்ளன. புதரை சுத்தம் செய்து, சுகாதாரமாக பராமரிக்க வேண்டும். இதுகுறித்து, முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பியுள்ளோம்.
இவ்வாறு, கூறினர்.
ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளது. இதனால், பள்ளி அடிப்படை வசதியில் கவனம் செலுத்துவதை தவிர்த்து விட்டனர். தற்போது ஆய்வு செய்ததில், பல பிரச்னைகள் இருப்பது தெரியவந்துள்ளது. விரைவில் சரி செய்யப்படும்,' என்றனர்.

