/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயணியர் நிழற்கூரையில் தலைக்கு மேல் ஆபத்து; அச்சத்துடன் காத்திருக்கும் அவலம்
/
பயணியர் நிழற்கூரையில் தலைக்கு மேல் ஆபத்து; அச்சத்துடன் காத்திருக்கும் அவலம்
பயணியர் நிழற்கூரையில் தலைக்கு மேல் ஆபத்து; அச்சத்துடன் காத்திருக்கும் அவலம்
பயணியர் நிழற்கூரையில் தலைக்கு மேல் ஆபத்து; அச்சத்துடன் காத்திருக்கும் அவலம்
ADDED : ஏப் 15, 2025 08:32 PM

வால்பாறை; வால்பாறையில், இடியும் நிலையில் உள்ள பயணியர் நிழற்கூரையை சீரமைக்க, அதிகாரிகள் தயக்கம் காட்டுவதால் மக்கள் கவலையடைந்துள்ளனர்.
வால்பாறை காந்தி சிலை வளாகம் தற்காலிக பஸ் ஸ்டாண்டாக செயல்படுகிறது. எஸ்டேட் பகுதிகளுக்கு இயக்கப்படும் அனைத்து பஸ்களும் காந்தி சிலை பகுதியில் இருந்து தான் இயக்கப்படுகின்றன.
இந்த பஸ் ஸ்டாண்டில் பயணியர் அமரும் வகையில், நிழற்க்கூரை கட்டப்பட்டுள்ளது. ஆனால், சேதமடைந்துள்ள நிழற்கூரையை சீரமைக்க எவ்வித நடவடிக்கையும் நகராட்சி சார்பில் மேற்கொள்ளவில்லை. இந்நிலையில், பயணியர் நிழற்கூரையின் மேல் பகுதி பாதி இடிந்து விழுந்த நிலையில் காட்சியளிக்கிறது. இதனால், பஸ்சுக்காக பயணியர் அச்சத்துடன் காத்திருக்கும் நிலை உள்ளது.
இது குறித்து, வால்பாறை மக்கள் கூறியதாவது: வால்பாறை நகராட்சி சார்பில், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் முறையாக செய்வதில்லை. குறிப்பாக, மக்களின் அடிப்படை தேவைகளை கூட நகராட்சி நிர்வாகம் முறையாக செய்வதில்லை.
மக்கள் வரிப்பணத்தில் பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளும் நகராட்சி நிர்வாகம், ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் காந்திசிலை வளாகத்தில் இடியும் நிலையில் உள்ள நிழற்கூரையை சீரமைக்க தயக்கம் காட்டுவது வேதனையளிக்கிறது.
மக்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் காந்தி சிலை பஸ் ஸ்டாண்டில் உள்ள பயணியர் நிழற்கூரையை உடனடியாக சீரமைக்க வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
பாதுகாப்பில்லை
வால்பாறை காந்திசிலை வளாகத்தில் இருந்து தான், எஸ்டேட் பகுதிகளுக்கு பஸ் இயக்கப்படுகின்றன. மாலை நேரத்தில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியகள், இரவு 9:00 மணி வரை பஸ்சிற்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
ஆனால், பயணியர் நிழற்கூரையில் மின்விளக்கு வசதி ஏற்படுத்தாததால், இருளில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால், பள்ளி மாணவியருக்கு போதிய பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. வால்பாறை நகராட்சி சார்பில் காந்தி சிலை பகுதியில் உள்ள, பயணியர் நிழற்கூரையில் மின் இணைப்பு வசதி ஏற்படுத்தி, மின்விளக்கு அமைக்க வேண்டும் என்பது பயணியரின் எதிர்பார்ப்பாக உள்ளது.