/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
/
எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர்கள் இல்லாமல் நோயாளிகள் அவதி
ADDED : மார் 03, 2024 08:58 PM
மேட்டுப்பாளையம்:மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர்கள் இல்லாததால், நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
மேட்டுப்பாளையம் நகர் பகுதியில் அரசு மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் 23 டாக்டர்கள், 40க்கும் மேற்பட்ட செவிலியர்கள், 20க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உள்நோயாளிகளுக்கு 146 படுக்கை வசதிகள் உள்ளன. பொது மருத்துவம், சித்தா பிரிவு, மகப்பேறு, பச்சிளம் குழந்தை பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பல் சிகிச்சை பிரிவு, கண் சிகிச்சை பிரிவு, எலும்பியல் மருத்துவ பிரிவு உள்ளிட்ட பல பிரிவுகள் செயல்படுகின்றன.
மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகையில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர்.
இதுதவிர வாகனங்கள் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வரும் போது ஏற்படும் சாலை விபத்துகள், உள்ளூரில் ஏற்படும் விபத்துகள் போன்றவற்றில் காயம் ஏற்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த மருத்துவமனையில் பிரேத பரிசோதனையும் செய்யப்படுகிறது.
இவ்வுளவு நோயாளிகள் வரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில், தற்போது எலும்பு முறிவு பிரிவில் மருத்துவர் இல்லாமல் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
விபத்து மற்றும் கீழே விழுந்து அடிபட்டு, எலும்பு முறிவு ஏற்பட்டு வரும் நோயாளிகள் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து நோயாளிகள் கூறுகையில், எலும்பு முறிவு பிரிவுக்கு எப்போது வந்தாலும் மருத்துவர்கள் இருப்பதில்லை. கோவை அரசு மருத்துவமனைக்கு செல்ல சொல்கிறார்கள். மேட்டுப்பாளையத்தில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரம் சென்று வைத்தியம் பார்க்க மிகவும் கடினமாக உள்ளது. ஏழை, எளிய மக்கள் தினம் தினம் அவதியடைந்து வருகின்றனர்,என்றனர். இதுகுறித்து மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் கார்த்திக் மகாராஜா கூறுகையில்,
எலும்பு முறிவு பிரிவின் மருத்துவர் மருத்துவமனைக்கு வந்து இரண்டு மாதங்கள் ஆகிறது. அதற்கு முன் ஒரு மாதம் விடுமுறை எடுத்திருந்தார். தற்போது தொண்டாமுத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் எலும்பு முறிவு மருத்துவர், மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கிறார்.
இங்கு நிரந்தர மருத்துவர் வேண்டும் என கேட்டுள்ளோம். நோயாளிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன, என்றார்.-

