/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி பெற தவம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
/
ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி பெற தவம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி பெற தவம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ஊராட்சிகளில் கட்டட வரைபட அனுமதி பெற தவம்! ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு
ADDED : ஜன 19, 2024 04:19 AM
கோவை : கோவை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கிராம ஊராட்சிகளில், கட்டட வரைபட அனுமதி பெறுவதற்கு, இணைய வழியில் விண்ணப்பிக்க முடியாத சூழல் உள்ளது. கடந்தாண்டு அக்., முதல் இந்நாள் வரை அனுமதி பெற முடியாமல், விண்ணப்பதாரர்கள் காத்திருக்கின்றனர்.
ஒரு கட்டடம் கட்ட வேண்டுமெனில், அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் விண்ணப்பித்து, அதற்குரிய கட்டணம் செலுத்தி, வரைபட அனுமதி பெற வேண்டும். 30 நாட்களுக்குள் அனுமதி தரப்படும் என அரசு தரப்பில் கூறினாலும், நிர்வாக ரீதியாக ஏதேனும் ஒரு காரணத்தை கூறி, விண்ணப்பதாரர்கள் அலைக்கழிப்பது வாடிக்கை. லஞ்சம் கொடுத்தால் மட்டுமே வரைபட அனுமதி கிடைக்கும் சூழல் காணப்படுகிறது.
இணைய வழி
இதற்கு தீர்வு காண, இணைய வழியில் விண்ணப்பித்து, வரைபட அனுமதி வழங்கும் திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டம், கடந்தாண்டு அக்., 2 முதல் ஊராட்சிகளிலும் அறிமுகம் செய்யப்பட்டது.
குடியிருப்புகளாக இருந்தால், 10 ஆயிரம் சதுர அடிக்குள், 8 குடியிருப்புகளுக்கு மிகாமல், 12 மீட்டர் உயரத்தை தாண்டாமல் இருக்க வேண்டும். தரைத்தளம் வாகன நிறுத்துமிடமாக இருந்தால், ஸ்டில்ட் மற்றும், 3 தளங்கள் வரை அனுமதி அளிக்கலாம்.
தரைத்தளம் குடியிருப்பாக இருந்தால், தரைத்தளம் மற்றும், 2 தளங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். வணிக கட்டடங்களின் பரப்பு, 2 ஆயிரம் சதுரடிக்குள் இருந்தால் மட்டுமே, கிராம ஊராட்சிகள் அனுமதி அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.
கறார் உத்தரவு
இணைய வழியிலேயே விண்ணப்பத்தை பெற வேண்டும். எவ்வளவு கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும், கள ஆய்வுக்கான நேரம் குறித்த தகவலையும் இணைய வழியிலேயே அளிக்க வேண்டும்.
அக்., 2க்கு பின், ஊராட்சிகளில் எந்தவொரு கட்டணத்தையும் ரொக்கமாக பெறக்கூடாது என, கறாராக தெரிவிக்கப்பட்டது.
விண்ணப்பிக்க முடியவில்லை
கோவை மாவட்டத்தில், 12 ஒன்றியங்களுக்கு கீழ், 228 ஊராட்சிகள் உள்ளன. இவ்வூராட்சிகளுக்கு உட்பட்ட கிராமங்களில் ஏராளமானோர் சொந்தமாக வீடு, கடைகள் மற்றும் குடோன்கள், தொழிற்சாலைகள் கட்டுகின்றனர். அவர்களால், இணைய வழியில் விண்ணப்பிக்க முடிவதில்லை.
ஊராட்சிகளில் பணிபுரி யும் அலுவலர்களுக்கு, இணைய வழியில் வரைபட அனுமதி கொடுப்பது தொடர்பான தொழில்நுட்ப அறிவு போதுமானதாக இல்லாததால், ஏராளமானோரின் விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன. இதனால், வரைபட அனுமதி மூலமாக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாயும் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்தாண்டு அக்., முதல் மூன்றரை மாதங்களாக, வரைபட அனுமதி கிடைக்காமல், விண்ணப்பதாரர்கள் தவிப்புக்குள்ளாகி உள்ளனர். கட்டுமான பணியை துவக்க முடியாமல், காத்திருக்கின்றனர்.

