/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பனியுடன் கூடிய சாரல் மழை குளிரால் மக்கள் பாதிப்பு
/
பனியுடன் கூடிய சாரல் மழை குளிரால் மக்கள் பாதிப்பு
ADDED : ஜன 20, 2025 06:32 AM

பொள்ளாச்சி : நாள் முழுதும் மழை தொடர்ந்த போதும், பொள்ளாச்சியில் நனைந்தபடி மக்கள் வாகனங்களில் பயணத்தைத் தொடர்ந்தனர்.மேலும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தின் பல மாவட்டங்களில் நேற்று மழை பெய்தது. அவ்வகையில், நேற்று, பொள்ளாச்சி நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில், இரவு முதலே பரவலாக மழையின் தாக்கம் காணப்பட்டது.
குறிப்பாக, காலை, 5:00 மணி முதலே பனியுடன் கூடிய துாறல் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது. நேற்று விடுமுறை என்பதால் நிலவிய குளிரான சீதோஷ்ணத்தால் மக்கள் பலரும் வெளியே செல்ல முடியாமல் வீடுகளிலேயே முடங்கினர்.
அதேபோல, ஆழியாறு அணை, கவியருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு வந்த சுற்றுலாப் பயணிகள், குளிர் காரணமாக, வாகனங்களில் இருந்து இறங்கவே தயக்கம் காட்டினர்.
நகரில், குடைகளை பிடித்தவாறும், ரெயின்கோட் அணிந்தவாறும், மழையில் நனைந்த படியும், தங்கள் அன்றாட பணிகளை தொடர்ந்தனர். ஐந்து நிமிடங்கள் சிறு துாறலாகவும், தொடர்ந்து குளிராகவும், மாறி மாறி மதியம் 2:00 மணி வரையும் மழை பெய்தது.
இதனால், மாலையில் கடைகளில் பணி முடித்து விட்டு, தொழிலாளர்கள் பலரும், வேகமாக வீடு திரும்பினர். கடைகளிலும் வழக்கத்தைவிட வாடிக்கையாளர் கூட்டம் குறைவாக காணப்பட்டது.
மக்கள் கூறுகையில், 'நேற்று காலை முதல் நகரை பனிமூட்டம் சூழ்ந்தது. சாரல் மழையுடன் பனிமூட்டமும் மாலை வரை நீடித்தது. வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. காற்றில் ஈரப்பதம் அதிகரித்து குளிர் நிலவியது,' என்றனர்.
குளிர்காரணமாக, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வால்பாறை
வால்பாறையில், கடந்த ஒரு மாதமாக மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து, பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. இதனால் பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு முதல் விடிய, விடிய சாரல்மழை பெய்தது. சாரல்மழையினால், சுற்றுலாபயணியர் மகிழ்ச்சியடைந்தனர். இதனிடையே வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் காலை, மாலை நேரத்தில் நிலவும் கடும் பனிப்பொழிவாலும், சாரல்மழையாலும் வால்பாறையில் கடுங்குளிர் நிலவுகிறது.
இதன் காரணமாக, அங்கு வந்த சுற்றுலா பயணியரும், மக்களும் பாதிக்கப்பட்டனர்.
அங்கு, 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 91.29 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 12.84 கன அடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து மின் உற்பத்திக்காக வினாடிக்கு, 1,231 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழை அளவு(மி.மீ.,): வால்பாறை - 2, ஆழியாறு - 7, காடம்பாறை - 6, சர்க்கார்பதி - 2, மேல்ஆழியாறு - 2, நவமலை - 5, பொள்ளாச்சி - 3.