/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தொடரும் சிறுத்தையின் வேட்டை திக்... திக்... மன நிலையில் மக்கள்
/
தொடரும் சிறுத்தையின் வேட்டை திக்... திக்... மன நிலையில் மக்கள்
தொடரும் சிறுத்தையின் வேட்டை திக்... திக்... மன நிலையில் மக்கள்
தொடரும் சிறுத்தையின் வேட்டை திக்... திக்... மன நிலையில் மக்கள்
ADDED : ஏப் 14, 2025 10:10 PM

பொள்ளாச்சி,; பொள்ளாச்சி அருகே ஆடு, கன்றுக்குட்டிகளை வேட்டையாடி ருசி பார்க்கும் சிறுத்தையால், மக்கள் நிம்மதி இழந்து தவிக்கின்றனர். விரைவில் சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொள்ளாச்சி அருகே, ஜமீன் புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ஆதியூரில், கடந்த, 3ம் தேதி பாலசுப்ரமணியம் என்பவரது தோட்டத்தில் கட்டப்பட்ட பசு கன்றை சிறுத்தை கடித்துக்கொன்றது.
இதையடுத்து, வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு செய்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். அங்கு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை.
அதன் பின்னர், இரண்டு நாட்களுக்கு முன்பு, கோவிந்தனுார் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு பின்புறம், ஆற்றுக்கு அருகே சிறுத்தையை நேரில் பார்த்ததாக,அவ்வழியாக சென்ற பால்காரர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், புரவிபாளையம் மயில்சாமி தோட்டத்துச்சாளைக்குள் நேற்று காலை, 5:00 மணிக்கு புகுந்த சிறுத்தை, பட்டியில் கட்டப்பட்டு இருந்த, ஆட்டுக்குட்டியின் கழுத்தை கவ்வி ரத்தம் குடித்தது.
ஆட்டுக்குட்டியின் முனகல் சப்தம் கேட்டு முழித்துக்கொண்ட மயில்சாமி, வெளியே வந்து சப்தம் போட்டதும், சிறுத்தை தப்பியோடி அருகே இருந்த ஆற்றையொட்டிய புதருக்குள் சென்று மறைந்தது. சிறுத்தை கடித்ததால், ஆட்டுக்குட்டி சம்பவ இடத்திலேயே இறந்தது.
திரண்ட மக்கள்
தகவல் அறிந்து அருகே தோட்டத்துச்சாளைகளில் வசிக்கும் மக்கள், விவசாயிகள் கூட்டமாக குவிந்து சிறுத்தை கடித்த ஆட்டை பார்த்தனர். அதன் கால்தடங்களை பார்த்து உறுதி செய்ததுடன் அதிர்ச்சியடைந்தனர்.
இதன் நடமாட்டம் தொடர்ந்து இப்பகுதியில் உள்ளதால், மக்கள் பதட்டமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டத்தால் பீதியடைந்துள்ள பெண்கள், பெரியோர், குழந்தைகளை வெளியே விளையாட விடாமல் பாதுகாப்பாக இருக்க, வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.
ஆடு, மாடுகளை ஆற்றோரம் தான் மேய்க்க மக்கள் செல்கின்றனர். அங்கு வந்து விட்டால் என்ன செய்வது என வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள் முடங்கும் சூழல் உள்ளது.
இரவு நேரத்தில் வந்த சிறுத்தை தற்போது, அதிகாலை நேரத்தில் வரத்துவங்கியுள்ளது. இதன் நடமாட்டத்தை கட்டுப்படுத்தாவிட்டால் பாதிப்பு ஏற்படும். இதே நிலை நீடிப்பதால் ஒரு வித பதட்டமும், அச்சமும் உள்ளதாக மக்கள் தெரிவித்தனர்.
வனத்துறை ஆய்வு
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை அதிகாரிகள், இறந்த ஆட்டை பார்த்ததுடன் அதன் கால்தடங்களை ஆய்வு செய்தனர்.
சிறுத்தை நடமாட்டம் உள்ளதால், தோட்டத்துச்சாளையில் இருந்து இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம், நாய் மற்றும் கால்நடைகளை பாதுகாப்பான இடத்தில் கட்டி வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குழந்தைகளை தனியாக விளையாட விட வேண்டாம் என வனத்துறை அதிகாரிகள், பொதுமக்களிடம் அறிவுறுத்தினர்.
சீக்கிரமாக பிடிங்க
விவசாயிகள், பொதுமக்கள் கூறியதாவது:
ஜமீன் ஆதியூரில் இருந்து, இரண்டு கி.மீ., துாரத்தில் உள்ள புரவிபாளையம் தோட்டத்துக்குள் வந்த சிறுத்தை, ஆட்டுக்குட்டியை கொன்று ரத்தம் குடித்துள்ளது. தொடர்ந்து, வளர்ப்பு பிராணிகளை ருசி பார்க்க துவங்கியுள்ள சிறுத்தை, அடுத்தது மனிதர்களை தாக்கி விடுமோ என்ற அச்சம் உள்ளது.
தோட்டத்துச்சாளைகளில், குழந்தைகளுடன் வசித்து வருகிறோம். காலை, இரவு என எந்த நேரமும் அவர்களை வெளியே விடக்கூட அச்சமாக உள்ளது.
எந்த நேரத்தில் சிறுத்தை வருமோ என்ற அச்சத்துடன் இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே,வனத்துறை அதிகாரிகள் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.