/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விமானப்படை தளம் அருகே வீடு கட்ட முடியாமல் மக்கள் தவிப்பு! தடையின்மை சான்று கேட்கும் ஊராட்சி நிர்வாகங்கள்
/
விமானப்படை தளம் அருகே வீடு கட்ட முடியாமல் மக்கள் தவிப்பு! தடையின்மை சான்று கேட்கும் ஊராட்சி நிர்வாகங்கள்
விமானப்படை தளம் அருகே வீடு கட்ட முடியாமல் மக்கள் தவிப்பு! தடையின்மை சான்று கேட்கும் ஊராட்சி நிர்வாகங்கள்
விமானப்படை தளம் அருகே வீடு கட்ட முடியாமல் மக்கள் தவிப்பு! தடையின்மை சான்று கேட்கும் ஊராட்சி நிர்வாகங்கள்
ADDED : செப் 26, 2024 11:42 PM

சூலுார் : வீடு கட்ட விமானப்படைத் தளத்தின் தடையின்மை சான்று அளிக்க வேண்டும், என, ஊராட்சி நிர்வாகங்கள் கூறுவதால், சூலுார் சுற்றுவட்டார கிராம மக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
சூலுார் அடுத்த காடாம்பாடி ஊராட்சி பகுதியில் விமானப்படைத் தளம் உள்ளது. இப்படைத்தளத்தை சுற்றி, காடாம்பாடி, காங்கயம்பாளையம், கலங்கல், அப்பநாயக்கன்பட்டி, திருப்பூர் மாவட்டத்துக்கு உட்பட்ட பருவாய் உள்ளிட்ட ஊராட்சிகள் உள்ளன. வளர்ச்சி அடைந்து வரும் பகுதியாகவும், போக்குவரத்துக்கு எளிதாக உள்ளதாலும், வெளி மாநிலம், வெளி மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் காலி மனையிடங்களை இக்கிராமங்களில் வைத்துள்ளனர்.
அவதி
கடந்த சில ஆண்டுகளாகவே விமானப்படைத்தளத்தில் ஓடு தளம் விஸ்தரிப்பு, வெடிபொருட்கள் பாதுகாப்பு மையம், குடியிருப்புகள் கட்டுதல் உள்ளிட்ட விரிவாக்க பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில், காடாம்பாடி, கலங்கல் உள்ளிட்ட ஐந்து கிராமங்களில் வீடு கட்டுவதற்கு, விமானப்படைத்தளத்தின் தடையின்மை சான்று இருந்தால் தான் கட்டட அனுமதி வழங்க முடியும் என, ஊராட்சி நிர்வாகங்கள் அறிவித்துள்ளதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறியதாவது:
நகர்புறங்களில் வீட்டு மனைகள் லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்று வருவதால், ஏழை, நடுத்தர குடும்பங்களால், வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால், குறைந்த விலையில் மனைகளை வாங்கி வீடு கட்டலாம் என, முடிவு செய்து, சூலுார் சுற்றுவட்டார கிராமங்களில் ஆயிரக்கணக்கானோர் இடம் வாங்கி வைத்துள்ளனர். அதில் வீடு கட்ட ஊராட்சி நிர்வாகத்தை நாடினால், விமானப்படைத்தளத்தின் தடையின்மை சான்று கட்டாயம் வேண்டும், எனக்கூறுகின்றனர். யாரிடம் சென்று தடையின்மை சான்று பெறுவது எனத்தெரியவில்லை. கடந்த சில மாதங்களாக என்ன செய்வதென்றே தெரியவில்லை. இப்பிரச்னைக்கு மாவட்ட நிர்வாகம் தான் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
போஸ்டர்
இப்பிரச்னை குறித்து ஊராட்சி நிர்வாகத்தினர் கூறியதாவது:
ஏற்கனவே விமானப்படைத் தளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி உயரமான கட்டடங்கள் கட்டக்கூடாது என, அறிவுறுத்தி இருந்தனர். சுற்றுவட்டார பகுதிகளில் குப்பை மற்றும் இறைச்சி கழிவுகள் கொட்டக்கூடாது, டிரோன்களை பயன்படுத்த கூடாது எனவும் அறிவுறுத்தி உள்ளனர்.
தேஜஸ் உள்ளிட்ட விமானங்கள் வருகை, கட்டமைப்பு விரிவாக்கப்பணி நடப்பதால், தற்போது, மேலும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். சுற்று சுவரை ஒட்டி, 100 மீட்டர் தூரத்துக்கு மரங்களோ, கட்டுமானங்களோ இருக்க கூடாது எனக் கூறியுள்ளனர். இதுகுறித்து எச்சரிக்கை அறிவிப்பு போஸ்டர்களை ஒட்டி வைத்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது புதிதாக, 4 கி.மீ., சுற்றளவுக்கு எந்தவொரு கட்டுமான பணிக்கும் தடையின்மை சான்று பெற வேண்டும் என, ஊரக வளர்ச்சி துறை, வருவாய்த்துறை வாயிலாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வீடு கட்ட அனுமதி கேட்டு வரும் மக்களிடம் விமானப்படைத்தளத்தில் தடையின்மை சான்று பெற அறிவுறுத்தி வருகிறோம். பொதுமக்கள் கடுமையாக பாதிப்புக்கு உள்ளாவதால், இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, காடாம்பாடி கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை தொடர்ந்து, இப்பிரச்னை தொடர்பாக, வருவாய்த்துறை, விமானப்படைத்தள அதிகாரிகள், ஊராட்சி தலைவர்கள் கூட்டம் நடந்தது. அதில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

