/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரோட்டில் நடத்தும் வாரச்சந்தைகளால் மக்கள் அவதி; நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம்
/
ரோட்டில் நடத்தும் வாரச்சந்தைகளால் மக்கள் அவதி; நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம்
ரோட்டில் நடத்தும் வாரச்சந்தைகளால் மக்கள் அவதி; நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம்
ரோட்டில் நடத்தும் வாரச்சந்தைகளால் மக்கள் அவதி; நிரந்தர தீர்வு ஏற்படுத்துமா மாநகராட்சி நிர்வாகம்
ADDED : செப் 18, 2025 10:21 PM

கோவை; கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துடியலுார், கணபதி மாநகர், காந்தி மாநகர், சேரன் மாநகர், சிங்காநல்லுார், மசக்காளிபாளையம், கோவைப்புதுார், மாச்சம்பாளையம், பீளமேடு, சவுரிபாளையம், ராமநாதபுரம், புலியகுளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வெவ்வேறான நாட்களில் வாரச்சந்தை நடத்தப்படுகிறது.
வாரச்சந்தைகள் நடத்துவதற்கென பிரத்யேகமாக மாநகராட்சி நிர்வாகம் இடம் ஒதுக்கிக் கொடுக்காததால், ரோட்டின் இருபுறமும் ஆக்கிரமித்து, கடைகள் உருவாக்கி, பொருட்களை பரப்பி வைத்து விற்கப்படுகின்றன. ரோட்டின் பெரும் பகுதி ஆக்கிரமிப்பில் சிக்குவதால், வாகன ஓட்டிகள், அவ்வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். வாகனங்களில் அதிவேகமாக செல்வதால், விபத்துகளும் ஏற்படுகின்றன,
காந்தி மாநகர் பகுதியில், மாநகராட்சிக்கு சொந்தமான மைதானத்தில் வாரச்சந்தை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதால், தற்போது ரோட்டில் நடத்தப்படுகிறது.
நுாற்றுக்கும் மேற்பட்ட கடைகள் வரிசையாக நடத்தப்படுகின்றன. வியாழன் தோறும் மாலை 4 முதல் இரவு 10 மணி வரை கடைகள் செயல்படுகின்றன. சந்தையில் பொருட்கள் வாங்க நுாற்றுக்கணக்கான மக்கள் சாரை சாரையாக வருவதால் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. அந்த ரோடு வழியாக வாகனங்களில்
செல்ல முடிவதில்லை. அப்பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள், தங்களது வீடுகளுக்குச் செல்வதற்கு கூட, மாற்றுவழியை தேட வேண்டியுள்ளது.
காந்தி மாநகர் வாரச்சந்தை வியாபாரிகள் கூறுகையில், 'முதலில், மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் வாரச்சந்தை கூடியது. தற்போது அங்கு சந்தை நடத்தக்கூடாது என தடை விதித்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் மட்டுமே சிறுவர்கள் விளையாடுகின்றனர். சந்தை மாலை நேரத்தில் நடக்கிறது. அச்சமயத்தில் யாரும் விளையாடுவதில்லை. அங்கு வாரச்சந்தை நடந்தால் யாருக்கும் பிரச்னை வராது; போக்குவரத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும்.
அங்கு சந்தை நடந்தபோது, ஒரு கடைக்கு, ரூ.25 முதல் ரூ.50 வரை கட்சியினர் வசூலித்தனர். மாநகராட்சி நிர்வாகமே நியாயமான கட்டணம் நிர்ணயித்து வசூலித்தால், செலுத்த தயாராக உள்ளோம். இப்பிரச்னைக்கு மாநகராட்சி நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.