/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு; லாரிகளில் தண்ணீர் வழங்க எதிர்பார்ப்பு
/
குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு; லாரிகளில் தண்ணீர் வழங்க எதிர்பார்ப்பு
குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு; லாரிகளில் தண்ணீர் வழங்க எதிர்பார்ப்பு
குடிநீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பு; லாரிகளில் தண்ணீர் வழங்க எதிர்பார்ப்பு
ADDED : நவ 17, 2025 01:48 AM

கோவை: சரவணம்பட்டி பகுதியில் குழாய் உடைப்பு சரிசெய்யப்பட்ட நிலையில், அதனருகே மீண்டும் கசிவு ஏற்பட்டதால், எட்டு நாட்களுக்கு பிறகு ஒரு பகுதியில் மட்டும், குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், பில்லுார் குடிநீர் திட்டத்தின்கீழ், மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் இருந்து குடிநீர் சேகரித்து, சீரான இடைவெளியில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில், பில்லுார் அணையின் மேற்புற பகுதியில் உள்ள குந்தா அணையில், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இதனால், கடந்த, 8, 9ம் தேதிகளில் குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்தது. பணி தாமதத்தால், 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
மறுநாள் குடிநீர் 'பம்ப்' செய்தபோது அதிக அழுத்தம் காரணமாக, சரவணம்பட்டி பகுதியில் பில்லுார்-2 திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது.
மாநகராட்சி பொறியாளர்கள், 1,000 எம்.எம்., விட்டமும், 6 மீட்டர் நீளமும் உள்ள இரும்பு குழாய் பொருத்தி சரி செய்தனர். நேற்று முதல் குடிநீர் வினியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி குடிநீர் வினியோகிக்கப்பட்டபோது, ஏற்கனவே குழாய் உடைந்த பகுதி அருகே குடிநீர் கசிவு ஏற்பட்டது.
எட்டு நாட்களுக்கும் மேலாக குடிநீரின்றி தவித்த சரவணம்பட்டி, கணபதி, காந்திபுரம், புலியகுளம், ராமநாதபுரம், சிங்காநல்லுார், ஒண்டிப்புதுார் பகுதி மக்கள், நேற்று குடிநீர் வினியோகிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.
ஆனால், சரவணம்பட்டி, கணபதி பகுதிகளுக்கு மட்டும் குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதர பகுதிகளில் குடிநீர் வராததால் கேன்களிலும், லாரிகளிலும் தண்ணீர் வரவழைத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்துவருகின்றனர். பணிகள் தாமதமாகும் பட்சத்தில், லாரிகளில் குடிநீர் வினியோகிக்க மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.
மாநகராட்சி உதவி பொறியாளர்கள் கூறுகையில், 'பில்லுார்-2 திட்டத்தில் சரவணம்பட்டி, கணபதி பகுதிகளில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. மீண்டும் கசிவு ஏற்பட்டுள்ளதால் இதர பகுதிகளுக்கு வினியோகிக்க முடியவில்லை. பணிகள் முடிந்தவுடன் குடிநீர் வழங்கப்படும்' என்றனர்.

