/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகராட்சியுடன் இணைக்க மக்கள், விவசாயிகள் ஆதரவும்... எதிர்ப்பும்...; கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்
/
நகராட்சியுடன் இணைக்க மக்கள், விவசாயிகள் ஆதரவும்... எதிர்ப்பும்...; கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்
நகராட்சியுடன் இணைக்க மக்கள், விவசாயிகள் ஆதரவும்... எதிர்ப்பும்...; கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்
நகராட்சியுடன் இணைக்க மக்கள், விவசாயிகள் ஆதரவும்... எதிர்ப்பும்...; கிராம சபை கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட்
ADDED : ஜன 28, 2025 06:31 AM

மேட்டுப்பாளையம் நகராட்சி எல்லையில், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில்,15 வார்டுகள் உள்ளன. இதன் கிராம சபை கூட்டம், இடையர்பாளையம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு காரமடை ஊராட்சி ஒன்றிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அனிதா தலைமை வகித்தார்.
எதிர்ப்பு
கூட்டத்தில் நகராட்சி எல்லை அருகே உள்ள, ஊராட்சி வார்டுகளை சேர்ந்த மக்கள், தங்கள் பகுதியை மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க வேண்டும் என, பேசினர். ஆனால், மோத்தேபாளையம், குத்தாரிப்பாளையம், வெள்ளிப்பாளையம், அறிவொளி நகர் ஆகிய கிராம பகுதிகளை சேர்ந்த, விவசாயிகள், பொதுமக்கள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் பேசியதாவது:
எங்கள் பகுதி முழுவதும் விவசாய பூமிகளாக உள்ளன. இக்கிராமங்களை நகராட்சியுடன் இணைத்தால், வரிகள் அதிகம் கட்ட வேண்டிய வரும். 100 நாள் வேலை வாய்ப்பு கிடைக்காது. எனவே நான்கு ஊராட்சி கிராமங்களை மேட்டுப்பாளையம் நகராட்சியுடன் இணைக்க வேண்டாம். அதற்கு பதிலாக, இந்த கிராமங்களை, அருகே உள்ள ஜடையம்பாளையம் ஊராட்சியுடன் இணைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் பேசினர்.
சிக்கதாசம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வேடர் காலனி, பாலப்பட்டி, எம்.ஜி.ஆர்., நகர், அண்ணா நகர் ஆகிய நான்கு கிராம மக்கள், பவானி ஆற்றையும், ஓடந்துறை ஊராட்சியையும் கடந்து வர வேண்டி உள்ளது. அதனால் எங்கள் நான்கு குடியிருப்பு பகுதிகளையும், ஓடந்துறை ஊராட்சியுடன் இணைக்க வேண்டும். நகராட்சியுடன் இணைத்தால், பவானி ஆற்றையும், ஓடந்துறை ஊராட்சியையும் கடந்து, நகராட்சி தூய்மை பணியாளர்கள் வரவேண்டும். அதனால் தேவையான அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போகும்.
இவ்வாறு மக்கள் பேசினர்.
இதற்கு அரசு அதிகாரிகள், நகராட்சியுடன் ஊராட்சி பகுதிகளை இணைப்பது குறித்து, நான்கு வாரங்களுக்குள், தங்கள் கருத்துக்களை, மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும் என்றனர். ஊராட்சி செயலர் பிரபு நன்றி கூறினார்.
நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை மலை அடிவாரம் ரங்கநாதபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, நாயக்கன்பாளையம் ஊராட்சி செயலாளர் கார்த்தி தலைமை வகித்தார்.
அதிகாரிகள் ஆப்சென்ட்
கூட்டத்தில், முன்னாள் துணைத் தலைவர் சின்னராஜ் பேசுகையில், நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட புதுப்புதூர் பகுதியில் கடந்த வாரம் காட்டு யானை தாக்கி, விவசாயி ஒருவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகளின் நடவடிக்கையை கேட்டறிய ஆவலாக இருந்தோம். ஆனால், வனத்துறையினர் யாரும் கூட்டத்துக்கு வரவில்லை. இது தவிர, சுகாதாரம், கல்வி, மின்சாரத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இப்பகுதியில் விவசாய பூமிகள் மலையிட பாதுகாப்புக்கு உட்பட்ட பகுதி என்பதால், அதை விற்பனை செய்யவும் முடியவில்லை என்றார்.
நாயக்கன்பாளையம் ஊராட்சி முன்னாள் துணைத் தலைவர் மகேந்திரன் பேசுகையில், இங்கு கூடும் சந்தை கட்டணம் யார் வசூல் செய்கிறார்கள் என்பதும் தெரியவில்லை என்றார்.
கோவை மாநகராட்சி உடன் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட அசோகபுரம், குருடம்பாளையம் ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து,கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள், மனுக்கள் அளித்தனர்.