/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளியை கொண்டாட மக்கள் ஆயத்தம்; நெரிசலை தவிர்க்க போலீசார் திட்டம்
/
தீபாவளியை கொண்டாட மக்கள் ஆயத்தம்; நெரிசலை தவிர்க்க போலீசார் திட்டம்
தீபாவளியை கொண்டாட மக்கள் ஆயத்தம்; நெரிசலை தவிர்க்க போலீசார் திட்டம்
தீபாவளியை கொண்டாட மக்கள் ஆயத்தம்; நெரிசலை தவிர்க்க போலீசார் திட்டம்
ADDED : அக் 23, 2024 12:19 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதியில், நெரிசலை தவிர்க்க போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.
தீபாவளி பண்டிகை வரும், 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட மக்கள் ஆயத்தமாகி வருகின்றனர். புத்தாடை வாங்க கடைவீதி, கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் வீதியில் உள்ள துணிக்கடைகளிலும், மளிகை பொருட்கள் வாங்க சத்திரம் வீதியிலும் அதிகளவு மக்கள் திரண்டு வருகின்றனர்.
மக்கள் கூட்டம் அதிகமாக வரும் என்பதால், போலீசார் போக்குவரத்து மாற்றம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சக்திவேல் கூறியதாவது:
பொள்ளாச்சி கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோட்டில், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், அவ்வழியாக நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. இந்த ரோட்டின் முகப்பு பகுதியில், பேரிகார்டுகள் வைக்கப்பட்டு இருசக்கர வாகனங்கள் மட்டும் வந்து செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது.
அதுவும் வார இறுதி நாட்களான, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இருசக்கர வாகனங்களும் அனுமதியில்லை. வாகனங்களை வெளியே நிறுத்தி நடந்து செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படும். மாரியம்மன் கோவில் வீதி வழியாக, எந்த வாகனங்களும் வர அனுமதியில்லை. அங்கு பேரிகார்டுகள் வைத்து வாகனங்கள் செல்லக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், வெங்கட்ரமணன் வீதியில் இருந்து கிழக்கு போலீஸ் ஸ்டேஷன் ரோடு, எஸ்.எஸ்., கோவில் வீதிகளுக்கு செல்லும், மூன்று குறுக்கு ரோடுகளிலும் வாகனங்கள் செல்ல அனுமதியில்லை. போக்குவரத்து தடை செய்யும் வகையில், பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன.
சத்திரம் வீதியிலும், மளிகை பொருட்கள் வாங்க கூட்டம் வரும் என்பதால், அங்கு இருசக்கர வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். நான்கு சக்கர வாகனங்கள், மரப்பேட்டை நுாலக ரோடு வழியாக செல்லலாம்.
இருசக்கர வாகனங்களை, ரோட்டோரங்களில் போக்குவரத்து இடையூறு இல்லாமல் நிறுத்திச் செல்ல வேண்டும். நான்கு சக்கர வாகனங்கள், தாலுகா அலுவலக ரோடு, தெப்பக்குளம் வீதி உள்ளிட்ட பகுதிகளில், 'பார்க்கிங்' செய்து நெரிசலை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டும்.
விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், கடை உரிமையாளர்களும், தங்களது கடைக்கு வருவோரின் வாகனங்களை நிறுத்த 'பார்க்கிங்' வசதி ஏற்படுத்த வேண்டும். இது நெரிசலை கட்டுப்படுத்த உதவியாக இருக்கும்.
போக்குவரத்து குறைந்த இரவு நேரங்களில், சரக்கு வாகனங்களை கொண்டு வந்து பொருட்களை இறக்கலாம். காலை, 8:00 மணிக்கு பின், சரக்கு வாகனங்களுக்கு அனுமதியில்லை. இந்த கட்டுப்பாடுகள், தீபாவளி பண்டிகை முடியும் வரை தொடரும். இதற்கு பொதுமக்கள், கடை உரிமையாளர்கள் ஒத்துழைப்பு வழங்கி, பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாட ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.