குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்: அப்பிலியபட்டியில் பரபரப்பு
குடிநீர் கேட்டு மக்கள் போராட்டம்: அப்பிலியபட்டியில் பரபரப்பு
UPDATED : அக் 09, 2026 12:00 AM
ADDED : அக் 08, 2026 10:18 PM

குடிமங்கலம்: முறையற்ற குடிநீர் இணைப்புகளை துண்டித்து, நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வினியோகிக்க வலியுறுத்தி, அப்பிலியபட்டி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஒன்றிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு ஏற்படுத்தினர்.
குடிமங்கலம் ஒன்றியம், பெரியபட்டி ஊராட்சிக்குட்பட்டது அப்பிலியபட்டி கிராமம். கிராமத்துக்கு திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், பல வாரங்களாக முறையாக குடிநீர் வினியோகிக்கவில்லை.
இதைக்கண்டித்து கிராம மக்கள் நிலத்தடி நீர்த்தேக்க தொட்டி முன், போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு, குடிமங்கலம் பி.டி.ஓ., உள்ளிட்ட அதிகாரிகள் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கிராம மக்கள் கூறியதாவது:
பல வாரங்களாக குடிநீர் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளோம். விலைக்கு வாங்கும் தண்ணீரும் உவர்ப்பாக இருப்பதால், பயன்படுத்த முடிவதில்லை.
பெரும்பாலானவர்கள் விவசாய தொழிலாளர்களாக இருப்பதால், வேலைக்கு கூட செல்லாமல், வாகனங்களில் பல கி.மீ., சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம்.
பெரியபட்டி ஊராட்சிக்கென ஒதுக்கீடு செய்யப்படும் குடிநீர், முறைகேடாக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய இணைப்புகளை துண்டிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமத்துக்கும் நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் வழங்காவிட்டால் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம்.
இவ்வாறு, தெரிவித்தனர்.
அதிகாரிகள் கூறுகையில், பெரியபட்டி ஊராட்சிக்கு, நாள்தோறும் திருமூர்த்தி கூட்டுக்குடிநீர் திட்டத்தில், 3 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் குடிநீர் வழங்க வேண்டும். இது குறித்து ஆய்வு செய்து நிர்ணயிக்கப்பட்ட அளவு குடிநீர் பெறப்படும். முறைகேடான குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்படும்,’ என்றனர். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர்.
