ADDED : செப் 03, 2026 07:04 PM
சூலுார்: முறையாக குடிநீர் வழங்க கோரி, அப்ப நாயக்கன் பட்டியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்டது அப்பநாயக்கன்பட்டி ஊராட்சி. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஏராளமான சிறிய மற்றும் பெரிய தொழிற் சாலைகள் செயல்படுகின்றன. ஒரு மாதத்துக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை செய்யப்படுவதால், மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். போராட்டங்களை நடத்திய பின், சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படும், என, அதிகாரிகள் உறுதி அளித்திருந்தனர். ஆனால், நிலைமை சீராகவில்லை. இதனால், நேற்று மாலை அப்பநாயக்கன் பட்டி பஸ் ஸ்டாப் அருகே மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:
குடிநீர் என்பது மக்களுக்கு அடிப்படை உரிமை. தேவையான அளவு குடிநீரை முறையாக வினியோகம் செய்ய கோரி மறியலில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.
சம்பவ இடத்திற்கு சூலுார் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சென்று மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.
