/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஊருக்குள் பஸ் வராததால் மறியலில் ஈடுபட்ட மக்கள்
/
ஊருக்குள் பஸ் வராததால் மறியலில் ஈடுபட்ட மக்கள்
ADDED : செப் 17, 2025 09:23 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, சர்வீஸ் ரோட்டில் இயக்கப்படாமல் மேம்பாலத்தில் பஸ்கள் சென்றதால் ஆவேசமடைந்த மக்கள், மறியலில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் கோமங்கலம்புதுாரில் இருந்து, வேலைக்கு செல்வோர், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பஸ்களில் சென்று வருகின்றனர்.
இந்நிலையில், மேம்பாலம் கட்டிய பின், பஸ்கள் சர்வீஸ் ரோடுக்கு வராமல், மேம்பாலத்தில் செல்வதால் மக்கள் சிரமப்படுகின்றனர். உரிய நேரத்துக்கு பஸ் கிடைக்காமல், திண்டாடும் நிலை ஏற்பட்டது.
இதனால், ஆவேசமடைந்த மக்கள், பா.ஜ. ஒன்றிய பொதுச்செயலாளர் சந்திரமோகன் தலைமையில், நேற்று பஸ்களை வழிமறித்து மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோமங்கலம்புதுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவர்த்தனாம்பிகை பேச்சு நடத்தினார்.
பொதுமக்கள் கூறுகையில், 'பஸ்கள் சர்வீஸ் ரோடு வழியாக ஊருக்குள் வராமல் மேம்பாலத்தில் செல்கின்றன. இதனால், பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர் உரிய நேரத்துக்கு செல்ல முடியாமல் திண்டாடுகின்றனர்.
அனைத்து பஸ்களும் சர்வீஸ் ரோடு வழியாக ஊருக்குள் வந்து செல்ல உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
இதையடுத்து இன்ஸ்பெக்டர், 'பஸ்கள் முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தப்படும். பஸ் பிரச்னை சம்பந்தமாக கூட்டம் நடத்தி தீர்வு காணலாம்,' என, தெரிவித்தார்.சமரசம் அடைந்த மக்கள், 20 நிமிட போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.