UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:36 PM

வால்பாறை: சோலையாறுடேம் பஜாரில் நள்ளிரவில் உலா வந்த சிறுத்தையால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு அணை. தமிழக – கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள இங்கு, சுற்றுலா பயணியர் தங்குவதற்கு வசதியாக, 50க்கும் மேற்பட்ட தங்கும்விடுதிகள் உள்ளன. தற்போது பள்ளிகள் தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணியர் அதிகளவில் திரண்டுள்ளனர்.
இந்நிலையில், வால்பாறை அடுத்துள்ள சோலையாறுடேம் பஜார் பகுதியில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 1:00 மணிக்கு சிறுத்தை ஒன்று ரோட்டில் ஹாயாக நடந்து செல்வது, அங்குள்ள சி.சி.டி.வி.,கேமராவில் பதிவாகியுள்ளது. இரவு நேரத்தில் நடமாடும் சிறுத்தையால் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணியரும் பீதியடைந்துள்ளனர்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘சோலையாறுடேம் பகுதியில் உள்ள தங்கும்விடுதிகளில் சுற்றுலா பயணிகள் கவனமாக இருக்க வேண்டும். மாலை நேரத்தில் குழந்தைகளை வெளியில் அழைத்து செல்வதையும், இரவில் வெளியில் செல்வதையும் தவிர்க்க வேண்டும்,’ என்றனர்.
