/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதர் மண்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை புனரமைக்க மக்கள் வலியுறுத்தல்
/
புதர் மண்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை புனரமைக்க மக்கள் வலியுறுத்தல்
புதர் மண்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை புனரமைக்க மக்கள் வலியுறுத்தல்
புதர் மண்டி கிடக்கும் கால்நடை மருத்துவமனை புனரமைக்க மக்கள் வலியுறுத்தல்
ADDED : பிப் 04, 2025 11:42 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, கால்நடை மருத்துவமனை வளாகத்தில், போதிய பராமரிப்பு இன்றி, புதர் சூழ்ந்து காட்சியளிக்கிறது. மேலும், போதிய உதவியாளர்கள் நியமிக்காததால், சிகிச்சையளிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.
பொள்ளாச்சி நகரில், ராஜாமில்ரோடு அருகே கால்நடை பெரு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு, கால்நடை உதவி இயக்குனர் அலுவலகமும் செயல்படுகிறது. நகர் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்த அதிகப்படியான கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
தினமும், காலை, 8:00 மணி முதல் மதியம், 12:00 மணி, மாலை, 3:00 மணி முதல் 5:00 மணி வரை, கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.இருப்பினும், கால்நடை மருத்துவமனை வளாகத்தில், செடிகள் முளைத்து புதராக காட்சியளிக்கிறது.
பழைய கட்டடங்கள் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளது. இங்குள்ள புதர்களில் விஷ ஜந்துகள் நடமாட்டம் உள்ளதால், கால்நடைகளை சிகிச்சைக்கு அழைத்து வரும் மக்கள் அச்சமடைகின்றனர்.
இதேபோல, மருத்துவமனையின் எதிரே குப்பை குவிக்கப்படுகிறது. காற்றுக்கு பறந்து வரும் குப்பை, மருத்துவமனை வளாகத்திற்குள் பரவி துர்நாற்றம் வீசுகிறது.
இது ஒருபுறமிருக்க, மருத்துவமனையில், கால்நடை உதவியாளர்கள் பற்றாக்குறை நிலவுகிறது. ஐந்து பேர் பணியில் இருக்க வேண்டிய இடத்தில், ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். மாடுகளை கயிறு கட்டி தள்ளுவது மற்றும் தடுப்பு ஊசி போடுவதற்கு கால்நடைகளை பிடிப்பதற்கு உதவியாளர்கள் இல்லாமல் சிரமம் ஏற்படுகிறது. ஒரு கால்நடை டாக்டர் உள்ள நிலையில், அவரும் அவ்வப்போது மாற்றுப் பணிக்கு சென்றுவிட்டால், கால்நடைகளுக்கு உரிய மாத்திரைகளை பரிந்துரை செய்ய முடியாத நிலை ஏற்படுகிறது.
மக்கள் கூறுகையில், 'மருத்துவமனை வளாகத்தில் உள்ள புதரை அகற்றவும், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களை நியமனம் செய்யவும் கால்நடைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதேனும் அவசர சிகிச்சைக்காக கால்நடைகளை அழைத்துச் சென்றால் துரிதமாக சிகிச்சை கிடைக்காத நிலை உள்ளது,' என்றனர்.