/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மயக்க ஊசியால் நிலைகுலைந்த வீரனை கண்டு கண்கலங்கினர் மக்கள்
/
மயக்க ஊசியால் நிலைகுலைந்த வீரனை கண்டு கண்கலங்கினர் மக்கள்
மயக்க ஊசியால் நிலைகுலைந்த வீரனை கண்டு கண்கலங்கினர் மக்கள்
மயக்க ஊசியால் நிலைகுலைந்த வீரனை கண்டு கண்கலங்கினர் மக்கள்
ADDED : அக் 18, 2025 09:41 AM

- சு. பிரதீப்குமார் -
பயிருக்கும், உயிருக்கும் சேதம் விளைவித்து திரிந்த காட்டு யானை ரோலெக்ஸ், நேற்று பெரும் படையின் முற்றுகையில், மயக்க மருந்து செலுத்தி வீழ்த்தப்பட்டான்.
கம்பீரமாக அலைந்து திரிந்த ரோலெக்ஸ், மயக்க மருந்தின் வீரியத்தை சமாளிக்க முடியாமல், நடை தளர்ந்து கண்கள் செருகி மயங்கி சாய்ந்ததை பார்த்து, அதை பிடிக்க வேண்டும் என்று ஒரு மாதத்துக்கு மேல் போராடி வந்த பொதுமக்களே, கண்கலங்கி நின்ற காட்சி, திரைப்பட காட்சிகளை காட்டிலும் உணர்ச்சிகரமாக இருந்தது.
விலங்குகளின் வாழ்விடமான காடுகளில், மனிதர்களின் ஆக்கிரமிப்பு அதிகரித்து, தாவர உணவும் தண்ணீரும் கிடைக்காத நிலை உருவானதால், விலங்குகள் உணவும் நீரும் தேடி ஊருக்குள் வர தொடங்கின. வயிறு பெருத்த யானைகள் இந்த பட்டியலில் முதலிடம் வகிக்கின்றன. அப்படி கோவை, தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் நுழைந்த ஒற்றை காட்டு யானை தான் ரோலெக்ஸ். பசி போக்க பயிர்கள் கிடைத்தால், வயிறார சாப்பிட்டு விட்டு போய்விடுவான். அலைந்து திரிந்தும் எதுவும் கிடைக்கவில்லை என்றால் தான், அவனுக்கு ஆத்திரம் வரும்.
வளரும் பயிர்களையும், அவ்வப்போது எதிர்ப்படும் மனித உயிர்களையும் சேதப்படுத்த ஆரம்பித்தான் ரோலெக்ஸ். அது அவன் பெற்றோர் சூட்டிய பெயர் அல்ல. கிராமவாசிகளும் வனத்துறையும் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பிடிகொடுக்காமல் சென்றதாலும், கூட்டமாக திரண்டு கூக்குரல் எழுப்பினாலும் பட்டாசுகள் வெடித்தாலும் பயப்படாமல் நடை போட்டதாலும், இளைஞர்களும் சிறுவர்களும் சூட்டிய பட்டப்பெயர் அது.
விலங்குகள் மீதான பாசமெல்லாம் இருந்தாலும், பயிர் மற்றும் உயிர் சேதத்தை எத்தனை காலம் பொருத்துக் கொள்ள முடியும்? ரோலெக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என, வனத்தை ஒட்டிய கிராமங்களின் விவசாயிகளும், பொதுமக்களும் போராட்டம் ஆரம்பித்தனர்.
சாலை மறியல், வனத்துறை அலுவலகம் முற்றுகை போன்றவை நடந்தன. அழுத்தம் வலுத்ததால், கடந்த செப்.5ம் தேதி, தலைமை வன உயிரின காப்பாளர் உத்தரவு பிறப்பித்தார். “எப்படியாவது ஒற்றை காட்டு யானையை பிடிக்க வேண்டும்” என்று.
எந்த வழிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தி, யானையை பிடிக்கலாம் என்பது அதன் உட்பொருள். உயிருடனோ அல்லது பிணமாகவோ என்பதை போல. உடனே வேலைகள் சுறுசுறுப்பாக நடந்தன. யானை பிடிக்கும் பணிக்காக பயிற்சி பெற்ற கும்கி யானைகள் முத்து, நரசிம்மன், கபில்தேவ் ஆகியவை டாப்ஸ்லிப் யானை முகாமில் இருந்து அவசரமாக கொண்டுவரப்பட்டது. பொள்ளாச்சி வனப்பிரிவு கால்நடை டாக்டர் விஜயராகவன் தலைமையிலான மருத்துவ குழு வரவழைக்கப்பட்டு, மயக்க ஊசிகள் மருந்துகளுடன் காட்டில் களம் இறங்கியது. ஆனால், செப்.20ம் தேதி, ரோலெக்ஸ் தாக்கியதில் டாக்டரே படுகாயம் அடைந்தார்.
முரட்டு யானையாக இருக்கிறதே என்று ஊழியர்கள் மத்தியில் கிலி பரவியது. அதன் விளைவாக யானை பிடிக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இருப்பினும், ரோலெக்ஸ் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
இதற்கிடையில், ரோலெக்சை பிடிப்பதற்காக வரவழைக்கப்பட்ட முத்து, நரசிம்மன் ஆகிய கும்கி யானைகளுக்கு மதம் பிடித்தது. ஊழியர்களின் பீதி அதிகரித்தது. அதிகாரிகள் இரு யானைகலையும் அதே அவசரத்துடன் டாப்ஸ்லிப் முகாமுக்கு திருப்பி அனுப்பினர். பதிலுக்கு அங்கிருந்து சின்ன தம்பி என்ற கும்கி யானை வரவழைக்கப்பட்டது.
யானை பிடிக்கும் பணி, ஒரு மாதம் தாண்டியும் தொடர்ந்ததால், சுற்று வட்டார பகுதிகளில், ரோலெக்ஸ் பற்றியே பேச்சாக இருந்தது. யாரும் வீழ்த்த முடியாத வீரனாக இருக்கிறானே என்று மக்கள் கோபம் கலந்த பிரமிப்புடன் விவாதித்தனர்.
வனத்துறைக்கு ரோலெக்சின் இந்த சவால், கடும் கோபத்தை ஏற்படுத்தியது. ஒற்றை ஆசாமி நமக்கு இப்படி தண்ணீர் காட்டுகிறானே என்று, இரவு பகலாக விவாதித்து போர் வியூகம் போல் திட்டம் வகுத்தனர்.
நேற்றுமுன்தினம், முதுமலை யானைகள் முகாமில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் ஆகிய இரு கும்கிகள் கூடுதலாக வரவழைக்கப்பட்டன. தொண்டாமுத்தூர் வட்டாரத்தில் தொடர் கனமழை பெய்தது. இருப்பினும், ரோலெக்ஸ் யானையின் நடமாட்டத்தை ஒரு டஜனுக்கு மேற்பட்ட அதிகாரிகள் கண்காணித்ததால், அதை மடக்க சரியான இடத்தை தேர்வு செய்தனர்.
நேற்று அதிகாலை 1 மணிக்கு, அவர்கள் வட்டம் போட்டிருந்த தேவராயபுரம், இச்சுக்குழி என்ற பள்ளத்தை ஒட்டியுள்ள வயலுக்குள் ரோலெக்ஸ் புகுந்தது குறித்து அவசர தகவல் வந்தது. வனத்துறையின் மொத்த டீமும் அலெர்ட் செய்யப்பட்டது. இச்சுக்குழி, அரங்கநாயகம் பழைய பில்டிங் அருகே ரோலெக்சை மடக்கி விடலாம் என தீர்மானித்தனர்.
ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், கோவை மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், போளும்பட்டி மற்றும் கோவை வன சரகர்கள், கோவை வன கோட்ட பணியாளர்கள் 30 பேர், ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இருந்து வந்திருந்த, 20 பேர், 4 வன கால்நடை டாக்டர்கள், 10 மருத்துவ உதவியாளர்கள், உள்ளூரை சேர்ந்த 10 பேர் என மிகப்பெரிய படையே ரோலெக்ஸ் என்ற ஒற்றை யானையை பிடிக்க, அணிவகுத்து போருக்கு செல்வது போல புறப்பட்டது.
அதிகாலை, 1:35 மணிக்கு, இச்சுகுழியில் வாழை தோட்டத்தில் சாவகாசமாக இலை தழைகளை சாப்பிட்டு கொண்டிருந்த ரோலெக்ஸ் யானையை பார்த்தனர். பெரும் படை என்றாலும், சத்தமின்றி வந்ததால் ரோலெக்ஸ் கவனிக்கவில்லை. டாக்டர்கள் பதுங்கி பதுங்கி சென்று, 20 அடி தூரத்தில் நின்றுகொண்டு, துப்பாக்கி மூலம் மயக்க ஊசியை ரோலெக்ஸ் மீது சுட்டனர். ஏதோ கடித்தது போல் இருந்திருக்கலாம், ரோலெக்சுக்கு. ஆனால் அலட்டிக் கொள்ளாமல் இலைகளை சாப்பிட்டது.
வயிறு நிரம்பியதும் அதிகாலை, 2:10 மணிக்கு, ரோலெக்ஸ் அங்கிருந்து புறப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் திட்டமிட்டதுபோலவே, அரங்கநாயகம் பில்டிங் அருகே யானை வந்தது. அப்போதே அதன் கால்கள் லேசாக தள்ளாட தொடங்கின. மயக்க மருந்து வேலை செய்தது. ரோலெக்சின் கண்கள் செருகின. தொடர்ந்து நடக்க முடியாமல் அவன் நிலைகுலைந்து நின்றான்.
அதற்காகவே காத்திருந்த அதிகாரிகள், கூடவே அழைத்து வந்திருந்த வசீம், கபில்தேவ், பொம்மன் ஆகிய மூன்று கும்கி யானைகளையும் ரோலெக்சை நோக்கி அனுப்பினர். 2 ஜே.சி.பி. எந்திரங்களும் தைரியமாக முன்னேறி ரோலெக்ஸ் அருகில் சென்றன. ரோலெக்ஸ் ஓடமுடியாமல் கும்கிகள் முற்றுகையிட, ஜேசிபி மேலேறி அலுவலர்கள் வலுவான நயிலான் கயிறை, ரோலெக்ஸ் மீது வீசி அதன் உடலையும் கால்களையும் சேர்த்து கட்டினர்.
அணிவகுத்து சென்ற வனத்துறை படையின் பின்னால் தொடர்ந்து நடந்து வந்த விவசாயிகள், இந்த காட்சியை மொபைல்போனில் பதிவு செய்து வாட்ஸ்ஆப் குழுக்களில் பகிர்ந்தனர். சில நிமிடங்களில் இருட்டை பொருட்படுத்தாமல் அங்கே பெரும் கூட்டம் திரண்டது.
பொழுது விடிய, விடிய, மக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. காலை, 6:30 மணிக்கு, ரோலெக்ஸ் யானையை, இருபுறமும் இரு கும்கிகள் கயிற்றை இழுத்தும், பின்புறம் ஒரு கும்கி ரோலெக்சை முன்னால் தள்ளியும் லாரியை நோக்கி செலுத்தின.
மயக்க மருந்தின் தாக்கம் இன்னமும் இருந்ததால், தன்னை சுற்றிலும் என்ன நடக்கிறது என்று புரிந்தாலும், ரோலெக்சால் எதுவும் செய்ய இயலவில்லை. போர்க்களத்தில் கைதாகி ஆயுதங்கள் பறிக்கப்பட்ட வீரனை போல, தலை குனிந்து தள்ளாடி தள்ளாடி நடந்தான். காலை, 7:10 மணிக்கு, வனத்துறை கொண்டுவந்திருந்த பிரத்யேக லாரியில் ரோலெக்ஸ் ஏற்றப்பட்டான்.
ஒன்றரை மாதமாக, தண்ணிகாட்டிய குற்றவாளி சிக்கிக்கொண்டான் என, மகிழ்ச்சியுடன் பார்க்க வந்த விவசாயிகளும், பொதுமக்களும் லாரியில் ஏற்றப்பட்ட ரோலெக்ஸ் நிமிர்ந்து நிற்க கூட முடியாமல் நிலைகுலைந்து போனதை கண்டதும் மனம் உடைந்து போனார்கள்.
எப்பேர்ப்பட்ட வீரன், இப்படி நிற்கிறானே, பார்க்கவே மனம் பொறுக்கவில்லையே என, கண்கலங்கி வருந்தினர். அதற்கு மேல் அந்த காட்சியை பார்க்க சகிக்காமல் அங்கிருந்து நகர்ந்தனர். காலை, 7:30 மணிக்கு, 10க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வாகனங்களுடன், ரோலெக்ஸ் யானையை, ஆனைமலை, வரகளியாறு யானைகள் முகாமுக்கு கொண்டு சென்றனர். நீண்ட நாள் ஆசை நிறைவேறிய நிலையிலும், முழுமையாக மகிழ்ச்சி அடையாத விசித்திர மன நிலையில் இருந்தனர் மக்கள். இருப்பினும், அபாரமாக திட்டம் போட்டு ரோலெக்சை பிடித்து சபதம் நிறைவேற்றி விட்டீர்கள் என்று சிலர் வனத்துறை குழுவினரை பாராட்டி, நன்றி தெரிவித்தனர்.