/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
/
அணையில் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும்
ADDED : ஏப் 29, 2025 11:47 PM

மேட்டுப்பாளையம், ; பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்ததால், தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில், படிந்துள்ள வண்டல் மண்களை எடுக்க, கோவை மற்றும் ஈரோடு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில் அமைந்துள்ள, பவானிசாகர் அணை, 115 அடி உயரம் ஆகும். இந்த அணை நிரம்பி வழியும் போது, கோவை மாவட்ட எல்லையில், 35 கிலோமீட்டர் தொலைவில், சிறுமுகை அருகே உள்ள ஆலங்கொம்பு வரை, பவானி ஆற்றில், தண்ணீர் தேங்கி நிற்கும். பல ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் தண்ணீர் தேங்கி நிற்கும். பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தண்ணீரில் அடித்து வரும் குப்பைகள், வண்டல் மண்ணாக மாறும். இந்த வண்டல் மண் சிறந்த இயற்கை உரமாகும்.
இதுகுறித்து சிறுமுகை விவசாயிகள் கூறியதாவது: கடந்தாண்டு பவானிசாகர் அணையில் நீர்மட்டம் குறைந்த போது, தண்ணீர் தேங்கி இருந்த இடங்களில் வண்டல் மண் படிந்திருந்தது. இந்த வண்டல் மண்ணை குறிப்பிட்ட அளவிற்கு எடுத்துக் கொள்ள, மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு அனுமதி வழங்கியது. இதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் வண்டல் மண் எடுத்து தங்கள் விவசாய நிலத்திற்கு பயன்படுத்தினர். இதனால் அணையில் தேங்கும் தண்ணீரின் கொள்ளளவும் உயர்ந்துள்ளது. தற்போது பவானிசாகர் அணையில், 69 அடிக்கு நீர்மட்டம் குறைந்துள்ளது. தண்ணீர் தேங்கியுள்ள பகுதிகளில் வண்டல் மண் அதிக அளவில் படிந்துள்ளது. எனவே கோவை, ஈரோடு ஆகிய மாவட்ட நிர்வாகம் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.