/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களை வந்து சேரும்!': கலாமின் அறிவுரையுடன் பிறந்த நாள் விழா
/
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களை வந்து சேரும்!': கலாமின் அறிவுரையுடன் பிறந்த நாள் விழா
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களை வந்து சேரும்!': கலாமின் அறிவுரையுடன் பிறந்த நாள் விழா
'விடாமுயற்சி இருந்தால் வெற்றி உங்களை வந்து சேரும்!': கலாமின் அறிவுரையுடன் பிறந்த நாள் விழா
ADDED : அக் 15, 2024 10:25 PM

பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி பள்ளிகளில், அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின், 93வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். இயற்பியல் ஆசிரியர் கணேசபாண்டியன் வரவேற்றார். தமிழாசிரியர் சரவணன் 'அப்துல்கலாம் வாழ்வும் தொண்டும்' என்ற தலைப்பில் பேசினார். மாணவர்கள், ஆசிரியர்கள் அப்துல்கலாம் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செய்தனர். ஆசிரியர் ஜான்பாஷா நன்றி தெரிவித்தார்.
* ஆர்.ஜி.எம்., மேல்நிலைப்பள்ளியில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா நடந்தது. கடந்த 2010ல் அவர் இப்பள்ளிக்கு வந்தபோது நடவு செய்த செடி, தற்போது மரமாகியுள்ளது.
அவரின் நினைவாகவும், மரியாதை செலுத்தும் வகையிலும், அந்த மரத்தின் கீழ் உருவபடம் வைக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்பட்டது.
போக்குவரத்து போலீசார் சார்பில், தேசிய மாணவர் படை மாணவர்கள், சாரண சாரணியர்களுக்கு போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மாணவர்களின் அறிவியல் கண்காட்சி பள்ளி அளவில் நடந்தது. கண்காட்சியில் பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் சகுந்தலாமணி, ஆசிரியர்கள் பங்கேற்று பார்வையிட்டனர்.
* ஆர்.கே.ஆர்.,கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பள்ளி முதல்வர் மாலா அப்துல்கலாம் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாணவர்களுக்கு பேச்சு, ஒப்புவித்தல், கட்டுரை, கையெழுத்து, படம் பார்த்து கதை சொல்லுதல் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
அப்துல்கலாமின் சாதனைகள் குறித்து மாணவர்கள் பேசினர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. போட்டிகளில் பங்கேற்ற மாணவர்களுக்கு, ஆர்.கே.ஆர்., கல்வி நிறுவன தலைவர் ராமசாமி, செயலாளர் கார்த்திக்குமார் பாராட்டு தெரிவித்தனர்.
* பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் தலைமை வகித்தார். தமிழாசிரியர் சின்னராஜ், 'விடாமுயற்சி இருந்தால், வெற்றி உங்களை வந்து சேரும்' என, அப்துல்கலாமின் கருத்துகளை மாணவியருக்கு எடுத்துரைத்தார்.
இளைஞர்களை ஊக்குவிக்கும் அவரின் பேச்சுகள் குறித்து மாணவியர் அர்ஷின்சனா, யாழினி பேசினர். அவரின் வாழ்க்கை வரலாறு குறித்து, வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. மாணவியருக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழாசிரியர் ராஜேந்திரன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி.,மேல்நிலைப்பள்ளியில், தேசிய பசுமைப்படை மற்றும் போடிபாளையம் பசுமைக்குரல் அமைப்பு சார்பில் அப்துல்கலாம் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
உதவி தலைமையாசிரியர் பூவிழி தலைமை வகித்தார். பசுமைக்குரல் அமைப்பு நிறுவனர் மகேந்திரன், மாணவ, மாணவியருக்கு மரக்கன்றுகள் வழங்கினார். உதவி தலைமையாசியர்கள் பத்மாவதி, மகாலட்சுமி, பசுமைக்குரல் நிர்வாகி சுந்தர், தேசிய பசுமை படை ஆசிரியர் (பொறுப்பு) பாலசுப்ரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஆனைமலை முக்கோணம் பகுதியில், கோவை தெற்கு மாவட்ட ஹிந்து இளைஞர் முன்னணி சார்பில், அப்துல்கலாம் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. முன்னதாக, அவரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் நந்தகுமார், கோவை கோட்டச் செயலாளர் பாலச்சந்தர் ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு மற்றும் பேனா வழங்கினர்.
- நிருபர் குழு -