/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பேரூர் தர்ப்பண மண்டபம்; திறப்பு விழா முடிந்தும் இன்னும் காத்திருப்பது ஏன்?
/
பேரூர் தர்ப்பண மண்டபம்; திறப்பு விழா முடிந்தும் இன்னும் காத்திருப்பது ஏன்?
பேரூர் தர்ப்பண மண்டபம்; திறப்பு விழா முடிந்தும் இன்னும் காத்திருப்பது ஏன்?
பேரூர் தர்ப்பண மண்டபம்; திறப்பு விழா முடிந்தும் இன்னும் காத்திருப்பது ஏன்?
ADDED : ஜூன் 08, 2025 10:49 PM

தொண்டாமுத்தூர்; பேரூர் படித்துறையில் புதியதாக கட்டப்பட்டுள்ள தர்ப்பண மண்டபத்தின் திறப்பு விழா முடிந்தும், மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது.
பேரூர் படித்துறையில், பேரூர் பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், பல நூற்றாண்டுகளாக தர்ப்பணம் கொடுக்கப்பட்டு வந்தது. இந்த இடம், மிகவும் தாழ்வாக இருந்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது, தர்ப்பணம் செய்யும் இடம், வெள்ளத்தால் சூழப்பட்டு வந்தது.
இந்நிலையில், தனியார் அறக்கட்டளை சார்பில், பேரூர் படித்துறையில், அறநிலையத்துறைக்கு சொந்தமான, 5.5 ஏக்கர் இடத்தில், 15 கோடி ரூபாய் மதிப்பில், புதிய தர்ப்பண மண்டபம் கட்டி முடிக்கப்பட்டது.
புதிய தர்ப்பண மண்டபம் கடந்த, பிப்., 5ம் தேதி, பேரூர் பட்டீஸ்வரர் கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. மே 18ம் தேதி, புதிய தர்ப்பண மண்டபத்தை, ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு திறந்து வைத்தார்.
திறப்பு விழா முடிந்த நிலையிலும், புதிய தர்ப்பண மண்டபம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமலே உள்ளது. இதனால், நொய்யல் ஆற்றின் வடக்கு திசையில் உள்ள தென்னை தோப்பிலேயே, பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
சில நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழையால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போதும், அந்த பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக மாறியதால், தர்ப்பணம் கொடுக்க வந்த பக்தர்கள், மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகினர்.
தற்போது, மீண்டும் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்க்கும். நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். எனவே, புதிய தர்ப்பண மண்டபத்தை விரைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.