ADDED : செப் 06, 2026 09:02 PM

கோவை: போக்குவரத்து போலீசாருக்கு வழங்கப்பட்டுள்ள நவீன கருவியை பயன்படுத்தி, கடந்த 20 நாட்களில் 2 ஆயிரம் விதிமீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதிவேகமாக வாகனம் ஓட்டுவதை கட்டுப்படுத்தும் வகையில், போக்குவரத்து போலீசாருக்கு 2 நவீன வேக அளவீட்டு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. இக்கருவிகளை பயன்படுத்தி போலீசார் 20 நாட்களாக சோதனை செய்து வருகின்றனர்.
பெரும்பாலான பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பிட்ட சில சாலைகளில் மட்டும் மணிக்கு 60 கி.மீ. வேகம் வரை அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இளைஞர்கள் பலர் விதிமீறுகின்றனர். இக்கண்காணிப்பின் மூலம் வேக வரம்பை மீறுவோருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
போக்குவரத்து துணை கமிஷனர் மகேஸ்வரன் கூறுகையில், ‘‘அதிவேகமே பல விபத்துக்களுக்கு காரணம். வேக அளவீட்டு கருவியை இயக்க 16 போலீசாருக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 20 நாட்களாக பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில், தினமும் சராசரியாக 100 வழக்குகள் வீதம், மொத்தம் 2,000 விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மதிப்பு, 30 லட்சம் ரூபாய். கூடுதலாக இரு கருவிகள் கேட்டுள்ளோம்,’’ என்றார்.
