பசுமையான நகரமாக்க திட்டம்! கரம் கோர்க்கும் அமைப்புகள்
பசுமையான நகரமாக்க திட்டம்! கரம் கோர்க்கும் அமைப்புகள்
ADDED : செப் 21, 2026 07:03 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை சார்பில், ‘ஒளிரும் பொள்ளாச்சி’ என்ற அமைப்பு சார்பில், சமூகம் சார்ந்த விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
பொள்ளாச்சி தொழில்வர்த்தக சபை தலைவர் முத்துசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:
பொள்ளாச்சியை துாய்மையான, பசுமையான ஆரோக்கியமான மற்றும் வளமான நகரமாக மாற்றுவதை நோக்கமாக கொண்டு, தொழில் வர்த்க சபை வெல்பேர் டிரஸ்ட் சார்பில் ‘ஒளிரும் பொள்ளாச்சி’ அறிமுகப்படுத்தப்படுகிறது.
வழிகாட்டியாக கோவை ராக், சிறுதுளி, ஒளிரும் கோவை போன்ற அமைப்புகள் கரம் கோர்த்துள்ளன. இதில், தெருக்கள், பொது இடங்களை துாய்மையாக வைத்தல், வீடு, வணிக கழிவுகளை முறையாக பிரித்தல், பிளாஸ்டிக் பயன்பாடு, தேவையற்ற கழிவுகளை குறைத்தல், மரக்கன்றுகள் நடுதல், அவற்றை தொடர்ந்து பராமரித்தல், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே துாய்மை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
அரசு, உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து, நகர்புற மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். பொள்ளாச்சியின் வளர்ச்சி அனைவரின் பொறுப்பு என்பதை உணர்ந்து, திட்டத்துடன் மக்கள் இணைந்து செயல்பட வேண்டும். திட்டத்தின் துவக்க விழா வரும், 24ம் தேதி நடக்கிறது.
இவ்வாறு, கூறினார்.
