காரமடையில் இருந்து கோவைக்கு மாற்றுப்பாதை: பரிந்துரைக்க திட்டம்!போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை
காரமடையில் இருந்து கோவைக்கு மாற்றுப்பாதை: பரிந்துரைக்க திட்டம்!போக்குவரத்து நெரிசல் குறையும் என நம்பிக்கை
UPDATED : ஆக 27, 2026 07:29 PM
ADDED : ஆக 27, 2026 07:21 PM

காரமடை: போக்குவரத்து நெரிசலால், காரமடை நகரில், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வரும் நிலையில், காரமடையிலிருந்து கோவைக்கு மாற்றுப்பாதை ஏற்படுத்த மாநில நெடுஞ்சாலைத்துறை பரிந்துரைக்க திட்டமிட்டுள்ளது. காரமடை நகரில், மேட்டுப்பாளையம், அன்னுார், தோலம்பாளையம், --சிறுமுகை பகுதிகளுக்கு செல்லும் முக்கிய சாலைகள் உள்ளன. இச்சாலைகளில், காலை, மாலை மற்றும் விசேஷ நாட்களில், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. காரமடை தோலம்பாளையம் சாலையில், தொழில் நிறுவனங்கள் அதிகம் உள்ளதால், பொருட்களை கொண்டு செல்ல, 100க்கணக்கான கனரக வாகனங்கள், கன்னார்பாளையம் சாலை வழியாகவும், சிறுமுகை சாலை வழியாகவும், கோவையிலிருந்து இருந்தும், காரமடை நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர்.
இதனால், கோவை --- மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில், காரமடை ரயில்வே மேம்பாலம் பகுதியில் போக்குவரத்து நெரிசலால், சுமார் 2 முதல் 3 கி.மீ., துாரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. காரமடை நகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்க, காரமடையில் இருந்து காந்திநகர் முதல் பெள்ளாதி பகுதியை இணைக்கும் சாலையை, ஆக்கிரமிப்பு அகற்றி அகலப்படுத்தி, போக்குவரத்துக்கு ஏற்றவாறு மேம்படுத்தினால், நகருக்குள் வராமல் கன்னார்பாளையம் வழியாக கோவை சாலையை அடைய முடியும் என, மேட்டுப்பாளையம் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம் வலியுறுத்தி, முதல்வர் தனி பிரிவுக்கும், மாநில நெடுஞ்சாலைத்துறைக்கும் கடிதம் அனுப்பினர்.
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் தினகரன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வாயிலாக, மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தியிடம், மனு குறித்து விவரம் கேட்டுள்ளார். கோட்டப் பொறியாளர் ஞானமூர்த்தி அளித்த பதில் மனுவில், 'காரமடையில் உள்ள காந்தி நகர் முதல் சின்ன தொட்டிபாளையம் வரை உள்ள சாலையை அகலப்படுத்தி, ஆக்கிரமிப்பை அகற்றி போக்குவரத்து நெரிசல் இன்றி வாகனங்கள் எளிதில் சென்று வர அரசுக்கு பரிந்துரைக்கப்படும். இச்சாலையில், வருவாய்த்துறை வாயிலாக, நில அளவைகள் மேற்கொள்ளப்பட்டு உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவித்துள்ளார். காரமடையில் இருந்து பெள்ளாதி சாலை வழியாக மத்தம்பாளையம் பகுதியை அடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
தினகரன் கூறுகையில், ''இத்திட்டம் நிறைவேறினால், காரமடை நகரில் போக்குவரத்து நெரிசல் குறைவது உறுதி. மேலும், மேட்டுப்பாளையம் ஊட்டியில் இருந்து கோவைக்கு செல்பவர்கள், இப்பாதையை பயன்படுத்திக் கொள்வர்,'' என்றார்.
