/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடிநீர் வழங்கும் பில்லுார் அணையில் பிளாஸ்டிக் கழிவுகள்; உடனடியாக அகற்ற கோரிக்கை
/
குடிநீர் வழங்கும் பில்லுார் அணையில் பிளாஸ்டிக் கழிவுகள்; உடனடியாக அகற்ற கோரிக்கை
குடிநீர் வழங்கும் பில்லுார் அணையில் பிளாஸ்டிக் கழிவுகள்; உடனடியாக அகற்ற கோரிக்கை
குடிநீர் வழங்கும் பில்லுார் அணையில் பிளாஸ்டிக் கழிவுகள்; உடனடியாக அகற்ற கோரிக்கை
ADDED : மே 27, 2025 09:49 PM

மேட்டுப்பாளையம்; பில்லூர் அணையில் மிதக்கும் குப்பைகளையும், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி பாட்டில்களையும் அகற்ற மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட எல்லையில், மலைகளுக்கு இடையே, 100 அடி உயரத்தில், பில்லூர் அணை கட்டப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் பில்லூர் அணைக்கு, நீர்வரத்து அதிகரித்து, அதிகபட்சமாக வினாடிக்கு, 16 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இரண்டு நாட்களாக பில்லூர் அணை நிரம்பி வழிகிறது.
இந்த அணையில் இருந்து நேரடியாக கோவை மாநகராட்சியின் குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது. பவானி ஆற்றிலிருந்து திருப்பூர் மாநகராட்சிக்கு இரண்டு குடிநீர் திட்டங்கள் உள்ளிட்ட 16 குடிநீர் திட்டங்கள் வாயிலாக தினமும் பல கோடி லிட்டர் தண்ணீர் எடுக்கப்படுகிறது. கோவை திருப்பூர் ஆகிய இரண்டு மாவட்ட மக்களின், குடிநீர் தேவையை, பில்லூர் அணையும், பவானி ஆறும் பூர்த்தி செய்கிறது. இந்நிலையில் காட்டாறு வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக், கண்ணாடி பாட்டில்கள், குப்பைகள், மரங்கள் ஆகியவை பில்லூர் அணை தண்ணீரில் மிதக்குகின்றன.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: பில்லூர் அணை தண்ணீரில், தமிழ்நாடு மின்சார வாரியம் மின்சாரம் உற்பத்தி செய்வதால், இதை மின்சார வாரியம் அணையை பராமரித்து வருகிறது. அணையில் தேங்கியுள்ள தண்ணீரில், அதிகபட்சமாக 45 அடி வரை சேறும் சகதியும் நிறைந்துள்ளதாக கூறுகின்றனர். மீதமுள்ள, 52 அடிக்கு மட்டுமே தண்ணீர் தேங்கியுள்ளது. அதிலும், 15 அடிக்கு சேறு கலந்த தண்ணீர் இருப்பதால், அதை குடிநீருக்கு எடுக்க முடியாது. அதனால், 37 அடி தண்ணீர் மட்டுமே குடிநீருக்கு பயன்படுத்த முடியும்.
ஒவ்வொரு முறையும் அணைக்கு வரும் வெள்ளத்தில் குப்பைகள் அதிகளவில் அடித்து வருகின்றன. தண்ணீரின் மேல் பகுதியில் மிதக்கும் குப்பைகள் அனைத்தும், சில நாட்களில், தண்ணீரின் அடி பகுதிக்கு சென்று விடும். இதனால் சேறின் அளவு அதிகரிக்கும், தண்ணீர் தேக்கம் அளவு குறைந்து கொண்டே வரும்.
தற்போது அணையில் பாதி அளவுக்கு மேல் சேறும் சகதியும் நிறைந்துள்ளன. எனவே கோவை மாவட்ட நிர்வாகம் சிறப்பு கவனம் எடுத்து, அதிக பரிசல்களை அமர்த்தி, இந்த குப்பைகளை கரையின் ஓரப்பகுதிக்கு கொண்டு வந்து, அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக எல்லையில் இருந்து, பில்லூர் அணை வரை பவானி ஆற்றில் நான்கு அல்லது ஐந்து இடங்களில், தடுப்பணைகள் கட்ட வேண்டும்.
இதனால் வெள்ளத்தில் அடித்து வரும் சேறும், சகதியும், அணைக்கு வருவது குறைய வாய்ப்புள்ளது. தடுப்பணைகளில் நீர்மட்டம் குறையும் பொழுது, ஒவ்வொரு ஆண்டும் சுத்தம் செய்தால், பில்லூர் அணைக்கு மழைக்காலத்தில் சேறும், சகதியும், குப்பைகளும் வருவது முற்றிலும் குறைய வாய்ப்புள்ளது.
எனவே தமிழக அரசும், கோவை மாவட்ட நிர்வாகமும், உடனடியாக நடவடிக்கை எடுத்து, பில்லூர் அணையில் மிதக்கும் குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.