/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு
/
துவங்கியது பிளஸ் 2 பொதுத்தேர்வு
ADDED : மார் 01, 2024 11:09 PM
- நிருபர் குழு -
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. இத்தேர்வை நேற்று, 7,184 பேர் எழுதினர்.
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 37 மையங்களில் பிளஸ்2 பொதுத்தேர்வு நேற்று துவங்கியது. ஆர்வமுடன் வந்த மாணவர்கள், கூட்டாக அமர்ந்து படித்ததை திருப்பி பார்த்தனர்.
தொடர்ந்து, தேர்வு துவங்குவதற்கு முன், மாணவர்கள், விநாயகப் பெருமானை வணங்கி வழிபட்டனர். மாரியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் விபத்தில் காயமடைந்து, 'வாக்கர்' உதவியுடன் மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார்.
காலை, 10:00 மணிக்கு வினாத்தாளும், காலை, 10:15 மணிக்கு விடைத்தாளும் வழங்கப்பட்டது. பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுத, மாணவர்கள், 3,354, மாணவியர், 3,959 என மொத்தம், 7,313 பேர் எழுத விண்ணப்பித்தனர்.
அதில், மாணவர்கள், 3,287, மாணவியர், 3897 என, மொத்தம், 7,184 பேர் தேர்வு எழுதினர். மாணவர்கள், 67, மாணவியர், 62 என மொத்தம், 129 பேர் தேர்வு எழுதவில்லை. மாற்றுத்திறனாளி மாணவர்கள், ஆசிரியர்கள் உதவியுடன் தேர்வு எழுதினர்.
மொழிப்பாடமாக தமிழ் மற்றும் பிரென்ச் மொழியில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது. வெளியாட்களை உள்ளே அனுமதிக்கவில்லை; பள்ளி மாணவர்கள், தனித்தேர்வர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை மற்றும் செல்போன் பேசக்கூடாது உள்ளிட்ட அறிவுரைகள் அடங்கிய நோட்டீஸ், தேர்வு மையத்தில் ஒட்டப்பட்டு இருந்தன. பொள்ளாச்சி கல்வி மாவட்ட அலுவலர் கேசவகுமார், தேர்வு மையங்களை ஆய்வு செய்தார்.
உடுமலை
உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில், பொதுத்தேர்வுக்கு 18 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நேற்று மொழிப்பாடத்தேர்வு துவங்கியது. காலை, 8:30 மணிக்குள் போலீஸ் பாதுகாப்புடன், ஐந்து வழிதடங்களில் அந்தந்த மையங்களுக்கு, வினாத்தாள்கள் கொண்டுசெல்லப்பட்டன.
மாணவர்கள், 10:15 மணிக்கு தேர்வு எழுத துவங்கினர். கல்வித்துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர். உடுமலை கோட்டத்தில் நேற்று 3,644 பேர் பிளஸ் 2 தமிழ் மொழிப்பாட தேர்வு எழுதினர்; 28 பேர் ஆப்சென்ட் ஆகினர்.

