444 கிலோ குட்கா பறிமுதல்
உடுமலை நகரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நகரின் பல்வேறு இடங்களில் போலீசார் ரகசிய ரோந்து சென்றனர்.
அப்போது சீனிவாசா வீதியில் உள்ள,ஒரு வீட்டில் குட்கா பொருட்கள் பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.அங்கிருந்து,444 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
குட்கா பொருட்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த,ராஜஸ்தான் மாநிலத்தைச்சேர்ந்த அஜய்ராம்,51,விருமாராம்,27,சுரேஷ்குமார்,20 ஆகியோரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர் விசாரணை நடந்துவருகிறது.
லாட்டரி விற்றவர்கள் கைது
கிணத்துக்கடவு, கோவில்பாளையம் சுற்று வட்டாரத்தில் லாட்டரி விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார் கோவில்பாளையத்தில் செல்வி, 35, என்பவரிடம் இருந்து 686 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
இதே போன்று காளியண்ணன்புதூர் பஸ் ஸ்டாப் அருகே சர்க்கரையப்பான், 60 என்பவரிடம் இருந்து, 800 லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், சட்ட விரோத லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
புகையிலை பொருள் விற்றவர்கள் கைது
கிணத்துக்கடவு, கல்லாங்காட்டுபுதுரை சேர்ந்தவர் சுசீலா, 50, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில், அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து போலீசார் கடையில் சோதனை மேற்கொண்டனர். இதில், புகையிலை பொருட்கள் விற்பனை செய்தது உறுதியானதையடுத்து, கடையில் இருந்து 10 புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சுசீலாவை போலீசார் கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
இதே போன்று, ஏலூர் பிரிவில் உள்ள பெட்டி கடையிலும், 34 புகையிலை பொருட்கள் பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்து, சிவகங்கையைச்சேர்ந்த திருஞானம், 43, என்பவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.