ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி., மாரிமுத்து தலைமையில், பொள்ளாச்சி குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுதுறை, எஸ்.ஐ., பாரதிராஜா மற்றும் போலீசார் வாளையார் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனை மேற்கொண்டனர்.
அவ்வழியாக வந்த காரை சோதனை செய்த போது, 300 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த மலப்புரத்தை சேர்ந்த சாஞ்சி இல்லியாஸ்,48, என்பவரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், உக்கடம் பகுதியில் பொதுமக்களிடம் இருந்து முறைகேடான ரேஷன் அரிசி வாங்கி சேகரித்து கேரளாவில் உள்ள தனது மளிகை கடையில் பதுக்கி வைத்து, கள்ள சந்தையில் விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, அவரிடம் இருந்து ரேஷன் அரிசி, வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.
அதிக பாரம்; டிப்பர் லாரிக்கு அபராதம்
கோவை, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் இருந்து அதிகளவு கனிமவளங்கள் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், பொள்ளாச்சி அருகே நல்லாம்பள்ளி பிரிவில், கோமங்கலம் போலீசார், வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, அவ்வழியாக வந்த டிப்பர் லாரியை சோதனை செய்தனர்.
அப்போது, லாரி டிரைவர் ஒத்தக்கால்மண்டபத்தை சேர்ந்த முருகன் என்பவரிடம் விசாரணை மேற்கொண்டனர். 'டிப்பர் லாரியில் திண்டுக்கல் மாவட்டம் கல்குவாரியில் இருந்து மதுக்கரையில் உள்ள கிரஷருக்கு, 30 டன் கனிமவளம் பாரம் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, லாரியை பறிமுதல் செய்து வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். வட்டார போக்குவரத்து அதிகாரிகள், அந்த வாகனத்துக்கு, 78,500 ரூபாய் அபராதம் விதித்தனர்.
புகையிலை பொருள் விற்றவர் கைது
கிணத்துக்கடவு, வடபுதுரை சேர்ந்தவர் சாந்தி, 45, மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து, கடையில் போலீசார் சோதனை செய்தனர். கடையில் இருந்து 1.100 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். புகையிலை பொருள் சட்டவிரோதமாக விற்பனை செய்ததால் சாந்தியை போலீசார் கைது செய்தனர்.