மொபைல் போன் பறித்தவர்கள் கைது
பொள்ளாச்சி அருகே உள்ள சடையகவுண்டனுார் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. டிராக்டர் ஓட்டுநர். கடந்த அக்., மாதம் 21ம் தேதி, பைக்கில், இரண்டு பேர், வேலுசாமியின் மொபைல்போனை பறித்து தப்பினர். மகாலிங்கபுரம் போலீசில் வேலுசாமி அளித்த புகாரின்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
மொபைல்போனை பறித்த ஆனைமலை அடுத்த வாழைக்கொம்பு பகுதியைச் சேர்ந்த கதிர்காமன், 27, தனியார் பஸ் கண்டக்டர்; நெகமம் அடுத்த செட்டிக்காபாளையம் வேலுமணி, தனியார் பஸ் கிளீனர் ஆகியோரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
சூதாடிய 7 பேர் மீது வழக்கு
பொள்ளாச்சி அருகே ஈஸ்வரன்கோவில் அருகே சூதாட்டம் நடைபெறுவதாக, மகாலிங்கபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அங்கு, சதீஷ்குமார் என்பவரது வீட்டில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த முருகன், செந்தில்குமார், நாகராஜன் உட்பட ஏழு பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களிடம் இருந்து, சீட்டு கட்டுகள் மற்றும் 33,060 ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டது.
மதுபாட்டில்கள் விற்றவர் கைது
பொள்ளாச்சி பகுதியில், சட்டவிரோத மதுபானம் விற்பனையை தடுக்க, போலீசார் அவ்வப்போது ரோந்து செல்கின்றனர். அதன்படி, கோட்டூர் போலீசார், சங்கம்பாளையம் பகுதியில் ரோந்து சென்றபோது, புதுக்கோட்டையைச்சேர்ந்த செல்வம், 21, என்பவர் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வதைக்கண்டறிந்தனர். அதன்பேரில், அவரை போலீசார் கைது செய்து, 23 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
மின்சாரம் தாக்கி ஒருவர் பலி
ஆனைமலை அருகே சேத்துமடையைச் சேர்ந்தவர் சீனிதுரை, 56. இவரது, மனைவி சகுந்தலா, 50. நேற்றுமுன்தினம் மதியம், 1:00 மணிக்கு, சகுந்தலா, துணிகளை துவைத்து, இரும்புக்கொடி கம்பியில் காயப்போட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது, சகுந்தலா மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. அப்போது அவர் சத்தம் போடவே, சீனிதுரை அங்கு விரைந்து வந்தார். தொடர்ந்து, சகுந்தலாவைக்காப்பாற்ற முயன்ற போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உடன், மகள் மதுசாந்தினி, சகுந்தலாவை மீட்டு பொள்ளாச்சி தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனைமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சே வல் சண்டை; 5 பேர் கைது
ஆனைமலை அருகே கருப்பம்பாளையம், வைக்கல்மேடு பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ஆனைமலை சப்-இன்ஸ்பெக்டர் முருகநாதன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.
அங்கு சேவல் சண்டையில் ஈடுபட்ட அகிலாண்டபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, கருப்பம்பாளையம் மகேஸ்குமார், 28, சிங்காநல்லுார் மனோஜ்குமார், 29, நாயக்கன்பாளையம் சக்திவேல், 34, ஆத்துப்பொள்ளாச்சி ஞானவேல், 37 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 2 சேவல்கள், 9 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
லாட்டரி விற்றவர்கள் கைது
ஆழியார் போலீசார் அங்கலக்குறிச்சியில் உள்ள வால்பாறை பஸ் ஸ்டாப் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரசால் தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை, அதேபகுதியைச் சேர்ந்த நாகமாணிக்கம், 87, என்பவர் விற்பனை செய்வதைக் கண்டறிந்தனர். அவரை போலீசார் கைது செய்து, 1250 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.
* நெகமம், கோப்பனூர்புதுாரைச்சேர்ந்தவர் ஆறுமுகம், 61, கூலி தொழிலாளி. இவர் கோப்பனூர்புதுாரில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வதாக நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து ஆறுமுகத்திடம் விசாரணை செய்தனர். இதில் அவர் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்தது உறுதியானது. தொடர்ந்து அவரிடம் இருந்து 82 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.