லாட்டரி சீட்டுகள் பறிமுதல்
பொள்ளாச்சி தாலுகா போலீசார், கோபாலபுரம் சோதனைச்சாவடியில் அவ்வப்போது, வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், கேரளாவில் இருந்து தமிழகம் நோக்கி வந்த பஸ்சில், லாட்டரி சீட்டு கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சந்தேகத்திற்கு உட்பட்ட ஒருவரிடம் விசாரித்ததில், முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதன்பேரில் அவரிடம் சோதனை மேற்கொண்டதில் 1740 லாட்டரி சீட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்வதையும் கண்டறிந்தனர்.
அதன்பேரில் அவரை கைது செய்த போலீசார், லாட்டரி சீட்டுகளையும் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர், ராமநாதபுரம் கமுதி பகுதியைச் சேர்ந்த மாரிகண்ணு, 51, என்பதும் தெரிந்தது.
* பொள்ளாச்சி, ஆச்சிபட்டியை சேர்ந்தவர் கதிர்வேல், 31, கூலித்தொழிலாளி. இவர் கோவில்பாளையம் சொசைட்டி அருகே, சட்ட விரோதமாக லாட்டரி விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதைத்தொடர்ந்து, கதிர்வேலிடம் விசாரித்ததில் லாட்டரி விற்றது உறுதியானதை தொடர்ந்து, அவரிடம் இருந்து 10 கேரளா லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும், கதிர்வேலை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.
கஞ்சா விற்றவர் கைது
கிணத்துக்கடவை சேர்ந்தவர் முத்துராஜ், 19. இவர் நெகமம் அருகே உள்ள கக்கடவு பஸ் ஸ்டாண்டில் கஞ்சா விற்பனை செய்வதாக, நெகமம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த போலீசார் முத்துராஜிடம் விசாரணை செய்தனர்.
இதில், அவர் கஞ்சா விற்பனை செய்வது உறுதியானது. அவரிடமிருந்து, 70 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து வழக்கு பதிந்துள்ளனர்.