தொழிலாளிகள் தற்கொலை
பொள்ளாச்சி அருகே, கொள்ளுப்பாளையத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி பிரதிப்குமார்,32. இவருக்கு மனைவி மற்றும் இரண்டரை வயது மகனும் உள்ளனர். கடன் தொல்லை மற்றும் குடும்ப பிரச்னைகள் இருந்துள்ளது. இந்நிலையில், குடும்பத்தகராறு காரணமாக மனைவி கோபித்துக்கொண்டு வெளியே சென்றார். பிரதீப்குமார் வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கோமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
* பெருந்துறையை சேர்ந்த கூலித்தொழிலாளி வீரமுத்து,65. இவர், கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன் போடிபாளையத்தில் தங்கி வேலைக்கு சென்று வந்தார். இந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக போடிபாளையம் வந்த அவர், ஆத்துப்பொள்ளாச்சி ஆற்றுப்பகுதியில், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.
இரு விபத்தில் இருவர் பலி
கேரளா மாநிலம், வண்ணாமடையை சேர்ந்த அஜய்,19, தனுவசந்த்,19 ஆகியோர், பொள்ளாச்சி நோக்கி பைக்கில் வந்தனர். பொன்னாயூர் அருகே, இவர்களுக்கு முன்பாக பைக்கில் சென்ற, தேவம்பாடிவலசுவை சேர்ந்த லட்சுமணசாமி, திடீரென வலது பக்கம் வாகனத்தை திருப்பினார்.
இதில், அஜய் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. தலையில் படுகாயமடைந்த அஜய், பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார். பின்னால் அமர்ந்திருந்த தனுவசந்த், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். மற்றொரு வாகனத்தில் வந்த லட்சுமணசாமி, அவரது அக்கா ருக்மணி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
* பொள்ளாச்சி அருகே, காளியாபுரம் நரிக்கல்பதியை சேர்ந்த சுந்தர்ராஜ்,65. இவர், இருசக்கர வாகனத்தில், நேற்றுமுன்தினம் வீட்டில் இருந்து மயிலாடுதுறை - கோட்டூர் செல்லும் ரோட்டில் சென்றார். பொங்காளியூர் பஸ்ஸ்டாப் அருகே எதிரே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் வந்த பைக், சுந்தர்ராஜின் பைக் மீது மோதியது. விபத்தில் படுகாயமடைந்த அவர், கோட்டூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் வழியில் இறந்தார்.பைக் ஓட்டி வந்த பொங்காளியூரை சேர்ந்த ராஜசேகர் என்பவரிடம் கோட்டூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
கல்லுாரி மாணவி தற்கொலை
பொள்ளாச்சியை சேர்ந்த, 18 வயது கல்லுாரி மாணவியும், தனியார் நிறுவனத்தில் வேலைக்கு செல்லும் வாலிபரும், கடந்த, ஐந்து மாதங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மனமுடைந்த மாணவி, வீட்டில் யாரும் இல்லாத போது துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பொள்ளாச்சி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.