/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி ஒரு வழியாக துவங்கியாச்சு! வரைபடத்துடன் ஆய்வு செய்த எஸ்.பி.,
/
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி ஒரு வழியாக துவங்கியாச்சு! வரைபடத்துடன் ஆய்வு செய்த எஸ்.பி.,
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி ஒரு வழியாக துவங்கியாச்சு! வரைபடத்துடன் ஆய்வு செய்த எஸ்.பி.,
போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி ஒரு வழியாக துவங்கியாச்சு! வரைபடத்துடன் ஆய்வு செய்த எஸ்.பி.,
ADDED : மே 19, 2025 11:28 PM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணி, நீண்ட இழுபறிக்கு பின் நேற்று துவங்கப்பட்டது. மொத்தம், 76.15 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டப்படுகிறது.
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் ஸ்டேஷன் பின்பக்கம், 3.39 ஏக்கர் (13,732 சதுர மீட்டர்) பரப்பில் போலீஸ் குடியிருப்பு இருந்தது. போதிய பராமரிப்பின்றி வலுவிழந்ததால், போலீசார் குடியிருப்பை காலி செய்தனர்.
அதன்பின், தமிழ்நாடு காவலர் குடியிருப்பு வீட்டு வசதி வாரியம் வாயிலாக கடந்த, 2020ம் ஆண்டு டெண்டர் விடப்பட்டு, பழைய கட்டடம் இடிக்கப்பட்டது.
சட்டசபையில் கடந்த, 2022ம் ஆண்டு தமிழக முதல்வர், பொள்ளாச்சியில் புதிதாக போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டப்படும் என, அறிவித்தார்.இதையடுத்து, காவலர் வீட்டு வசதி வாரிய மேலாண்மை இயக்குனர், கடந்த இரு ஆண்டுக்கு முன் ஆய்வு செய்தார். அதன்பின், போலீஸ் குடியிருப்புக்கான அளவை அதிகரிக்க தமிழக அரசு அறிவுறுத்தியது.
அதன் அடிப்படையில், புதிய குடியிருப்புகளுக்கான வரைபடம் தயாரிக்கும் பணிகள் நடந்தது. அரசு நிதி ஒதுக்கீடு செய்ததும் பணிகள் துவங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்பின், கடந்தாண்டு பொள்ளாச்சி போலீஸ் குடியிருப்பு புதியதாக கட்ட அரசு, 76.15 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அதில், எட்டு இன்ஸ்பெக்டர்கள், 20 எஸ்.ஐ.,க்கள் வீடுகள், 194 போலீசார் என மொத்தம், 222 வீடுகள் கட்டப்பட உள்ளன. இதற்காக டெண்டர் விடப்பட்டு பணிகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் துவங்கப்படாமல் இழுபறியாக இருந்தது.
இதனால், அந்த இடம் புதர் மண்டி விஷபூச்சிகளின் இருப்பிடமாக மாறியது. மேலும், சமூக விரோதிகள், திறந்தவெளி, 'பார்' ஆக பயன்படுத்துகின்றனர். அங்கு இரவு நேரத்தில் சட்டவிரோத செயல்கள், விரும்பத்தகாத செயல்கள் அரங்கேறுகிறது.
நிதி ஒதுக்கீடு செய்தும் பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. இதனால், காவலர்கள், சமூக ஆர்வலர்கள், கட்டடம் கட்டும் பணி எப்போது துவங்கப்படும் அரசுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
இந்நிலையில், தமிழக முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக, போலீஸ் குடியிருப்பு கட்டடம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி நடக்கும் இடத்தை கோவை மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பார்வையிட்டு, வரைபடத்தை ஆய்வு செய்து, பணிகளை துவக்கி வைத்தார். ஏ.எஸ்.பி., சிருஷ்டி சிங் மற்றும் போலீசார் பங்கேற்றனர்.
நிருபர்களிடம் எஸ்.பி.,கூறுகையில், ''பொள்ளாச்சியில், போலீசாரின் பல ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, 76.15 கோடி ரூபாய் செலவில், புதிய குடியிருப்புகள் கட்டப்படுகிறது. இப்பணிகள் விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு விடப்படும்,'' என்றார்.