பிரதமர் வருகை முன்னிட்டுபோலீஸ் பாதுகாப்பு ஒத்திகை
பிரதமர் வருகை முன்னிட்டுபோலீஸ் பாதுகாப்பு ஒத்திகை
ADDED : நவ 19, 2025 03:33 AM

கோவை: கோவைக்கு பிரதமர் மோடி வருகை தருவதை முன்னிட்டு, போலீஸ் பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது.
தென்இந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில், இயற்கை விவசாயிகள் மாநாடு, கோவை அவினாசி ரோட்டிலுள்ள கொடிசியா வர்த்தக கண்காட்சி அரங்கில் இன்று துவங்கி, 21 ம் தேதி வரை நடக்கிறது. மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி, பிற்பகல் 1:40 மணிக்கு துவக்கி வைக்கிறார். முன்னதாக ஆந்திரமாநிலம், புட்டபர்த்தியில் இருந்து தனி விமானத்தில் மதியம் 12:30 மணிக்கு புறப்பட்டு, பிற்பகல் 1:25 மணிக்கு கோவை விமான நிலையம் வந்தடைகிறார்.
பிரதமர் வருகை முன்னிட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தமிழக ஏ.டி.ஜி.பி., டேவிட்சன் தேவாசீர்வாதம் பங்கேற்று, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார். இதில், மாநகர போலீஸ் கமிஷனர் சரவணசுந்தர் மற்றும் போலீஸ் அதிகாரிகள் பங்கேற்றனர்.
அதைதொடர்ந்து, பிற்பகல் 1:00 மணிக்கு, விமான நிலையம் முதல் கொடிசியா வர்த்தக கண்காட்சி வளாகம் வரை ஏ.டி.ஜி.பி., முன்னிலையில், பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோட்டில் இருபுறத்தில் நிறுத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு ஒத்திகை முன்னிட்டு, அவினாசி ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

