மாசுபடும் அமராவதி ஆற்று நீர்: கண்டுகொள்ளாத துறைகள்
மாசுபடும் அமராவதி ஆற்று நீர்: கண்டுகொள்ளாத துறைகள்
UPDATED : அக் 08, 2026 07:32 PM
ADDED : அக் 08, 2026 07:29 PM
மடத்துக்குளம்: வரலாறு மற்றும் ஆன்மிக சிறப்பு வாய்ந்த கொழுமம் அமராவதி ஆற்றங்கரையில், துாய்மை பணிகளை மேற்கொண்டு சூழலியலை பாதுகாக்க, அனைத்துத்துறைகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மடத்துக்குளம் தாலுகா கொழுமம் பகுதியில், அமராவதி ஆற்றங்கரையில் பழமையான கோவில்கள் அமைந்துள்ளன. வரலாறு மற்றும் ஆன்மிக சிறப்புகள் வாய்ந்த இப்பகுதியில், அமராவதி ஆறு பல வகைளிலும் மாசுப்படுத்தப்படுகிறது.
ஆற்றங்கரையை ஒட்டியுள்ள குடியிருப்புப் பகுதிகளில் இருந்து குப்பை கொட்டுவதும், சாக்கடை கழிவு நீர் நேரடியாக ஆற்றில் கலப்பதும் பெரும் சவாலாக உள்ளது. அங்குள்ள தடுப்பணைகளில் தேங்கும் தண்ணீரை பயன்படுத்த முடிவதில்லை.
ஆற்றில் பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் மற்றும் கழிவுகள் ஆங்காங்கே வீசப்படுகின்றன. ஆற்றில் நீராடுபவர்கள் தங்கள் பழைய துணிகளை ஆற்றங்கரையிலேயே விட்டுச்செல்கின்றனர்.
இவ்வாறு, பல வழிகளில் ஆற்று நீர் மாசடைகிறது. கொழுமம் ஊராட்சி சார்பில், திருவிழா காலங்களுக்கு பின், துாய்மைப்பணியாளர்களைக்கொண்டு கழிவுகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
சுற்றுச்சூழல் அமைப்புகள் சார்பிலும், கழிவுகளை ஆற்றில் கொட்டக்கூடாது என்ற பிரசாரமும் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், எவ்வித முன்னேற்றமும் இல்லை. அரசுத்துறையினரும் கண்டுகொள்வதில்லை.
அமராவதி ஆற்றங்கரையின் சூழலை பாதுகாக்க, ஆற்றங்கரையில் போதுமான எண்ணிக்கையில் குப்பைத்தொட்டிகள் அமைக்க வேண்டும்.
கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கும் நடைமுறையைத் தீவிரப்படுத்தி, கழிவு நீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்க வேண்டும்.
திருப்பூர் மாவட்ட நிர்வாகம், நீர்வளத்துறை, ஹிந்து சமய அறநிலையத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட துறைகளை ஒருங்கிணைத்து, அமராவதி ஆற்று நீர் மாசுபடுதலை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழுமம் அமராவதி ஆற்றங்கரை துாய்மையாக பராமரிக்கப்பட்டால், அது நிலத்தடி நீர் ஆதாரத்தைப் பாதுகாப்பதுடன், அப்பகுதியின் சூழலியல் மற்றும் ஆன்மிகச் சிறப்பையும் மேம்படுத்தும்.
