/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
/
பள்ளிகளில் பொங்கல் விழா; மாணவர்கள் உற்சாகம்
ADDED : ஜன 14, 2025 09:17 PM

- நிருபர் குழு -
பொள்ளாச்சி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள பள்ளிகளில், பொங்கல் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
* பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். மாணவ, மாணவியர் பாரம்பரிய உடைகளை அணிந்து பள்ளிக்கு வந்தனர்.
மாணவர்களின் பாட்டு, கும்மியாட்டம், ஒயிலாட்டம், இசைக்கருவி இசைத்தல் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பள்ளி மாணவர்கள் இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கும் போட்டியில் பங்கேற்று அசத்தினர்.
* கோடங்கிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில், கயிறு இழுத்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. பள்ளி தலைமையாசிரியர் தினகரன், ஆசிரியர் சத்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
* கேசவ் வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளியில் விழாவையொட்டி, மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய கலைகளான சிலம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், வள்ளி, கும்மி ஆகியவை நடத்தப்பட்டன. பள்ளி தாளாளர் மாரிமுத்து, செயலாளர் ரவிச்சந்திரன், முதல்வர் பிரகாஷ், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.
* சக்தி தகவல் மற்றும் மேலாண்மை கல்லுாரியில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மாணவர்கள், பல்வேறு வண்ணத்தில் கோலமிட்டனர். நடனம், பாட்டு, உறியடி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
வால்பாறை
* வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் தலைமை வகித்தார். மாணவர்கள் பள்ளி வளாகத்தில் பூக்கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபாட்டனர்.
* முடீஸ் மத்திய நடுநிலைப்பள்ளியில், தலைமை ஆசிரியர் கணேசன் தலைமையில், பள்ளி வாசலில் பூக்கோலமிட்டு பொங்கல் வைத்தனர். பண்டிகை குறித்தும், சிறப்பு குறித்தும் மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் பேசினர்.
* சிறுகுன்றா மேல்பிரட்டில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், சமத்துவ பொங்கல் விழா அங்கன்வாடி பணியாளர் முனியம்மாள் தலைமையில் நடந்தது. பொங்கல் வைத்து பாட்டுப்பாடியும், நடனமாடியும் இறைவனை வழிபட்டனர். தொடர்ந்து குழந்தைகளுக்கு நகராட்சி தலைவர் அழகுசுந்தரவள்ளி பரிசு வழங்கினார்.
* ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில் சுபாஷ் சந்திர போஸ் உண்டு உறைவிடப்பள்ளியில், பொங்கல் விழா நேசம் டிரஸ்ட் மேலாண்மை இயக்குனர் செந்தில்குமார் தலைமையில் நடந்தது. செயலாளர் ராஜேஸ்வரி குத்துவிளக்கேற்றி விழாவை துவக்கி வைத்தார்.
பழங்குடியின மாணவ, மாணவியர் பூக்கோலமிட்டு, பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். பொங்கல் கொண்டாடுவதன் நோக்கம் குறித்து, ஆசிரியர்கள் விளக்கி பேசினர். விழா ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
உடுமலை
* உடுமலை, கோமங்கலம்புதுார் வித்யநேத்ரா மெட்ரிக் மற்றும் சர்வதேச பள்ளியில் பொங்கல் விழா நடந்தது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சூரிய வழிபாட்டுடன் பொங்கல்விழா கொண்டாடினர். கோலப்போட்டி, பம்பரம் சுற்றுதல், டயர் வண்டி ஓட்டுதல், கில்லி உள்ளிட்ட போட்டிகளும், பாரம்பரிய கலைகளும் நடந்தன. பள்ளியின் நான்கு அணி மாணவர்களின் கும்மியாட்டம் நடந்தது. உறியடி, தேவராட்டம், ரேக்ளா பயணம் நடந்தது.
பள்ளி தாளாளர் நந்தகோபாலகிருஷ்ணன், மெட்ரிக் பள்ளி முதல்வர் கோபாலகிருஷ்ணன், சர்வதேச பள்ளி முதல்வர் பிரான்ஸிலின் டாலி மற்றும் ஆசிரியர்கள் விழாவில் பங்கேற்றனர்.
* ஆர்.கே.ஆர்.கிரிக்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்த பொங்கல் விழாவில் கல்வி நிறுவன தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் கார்த்திக்குமார் முன்னிலை வகித்தார். பாடகர்கள் செந்தில்கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர், மாணவர்களுடன் இணைந்து பாடல்கள் பாடினர்.
மாணவர்களின் கும்மியாட்டம், புலி ஆட்டம், காவடியாட்டம், உருமி, கோல்கால், கரகம், சிலம்பம், களரி, உறியடித்தல், கயிறு இழுத்தல், சைக்கிள் மெது ஓட்டம், நுங்கு வண்டி ஓட்டுதல், பூப்பறிக்க வருதல், முறுக்கு கடித்தல் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள் இடம் பெற்றன. சூரிய பொங்கல், மாட்டுப்பொங்கல் மற்றும் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. பள்ளி முதல்வர் மாலா நன்றி தெரிவித்தார்.