/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
போத்தனுார் சர்ச் ரோடு முழுவதும் பள்ளம்; விபத்து ஏற்படுவதால் தினமும் பதறுது உள்ளம்
/
போத்தனுார் சர்ச் ரோடு முழுவதும் பள்ளம்; விபத்து ஏற்படுவதால் தினமும் பதறுது உள்ளம்
போத்தனுார் சர்ச் ரோடு முழுவதும் பள்ளம்; விபத்து ஏற்படுவதால் தினமும் பதறுது உள்ளம்
போத்தனுார் சர்ச் ரோடு முழுவதும் பள்ளம்; விபத்து ஏற்படுவதால் தினமும் பதறுது உள்ளம்
ADDED : பிப் 12, 2025 12:16 AM

மோசமான ரோடு
போத்தனுார், சர்ச் ரோட்டில் பல இடங்களில் சாலை மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது. ரயில் திருமண மண்டபம் அருகே, சர்வீஸ் ரோடு முழுவதும் பள்ளங்களாக உள்ளது. வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குவதால், விரைந்து சாலையை சீரமைக்க வேண்டும்.
- பாலன், போத்தனுார்.
போக்குவரத்து நெரிசல்
மருதமலை தேவஸ்தான பள்ளி தொண்டாமுத்துார் ரோடு சந்திப்பில், தானியங்கி சிக்னல் இருந்தும் உபயோகமில்லை. காலை, மாலை வேளைகளில், அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நெரிசலுக்கு தீர்வு காண வேண்டும்,
- சண்முகம், மருதமலை.
கடும் துர்நாற்றம்
நரசிம்மநாயக்கன்பாளையம் மெயின் ரோட்டில், குப்பை, ஓட்டல் கழிவுகளை தொடர்ந்து சிலர் கொட்டுகின்றனர். இறைச்சிக் கழிவுகளையும் வீசிச் செல்கின்றனர். பல வாரங்களாக தேங்கியுள்ள கழிவு அழுகி, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- திலகவதி, நரசிம்மநாயக்கன்பாளையம்.
சாலையெங்கும் பள்ளங்கள்
கே.கே.புதுார், மணியம் காளியப்பா வீதியில் பல வருடங்கள் ஆன, தார் சாலை பயன்படுத்த முடியாதபடி சேதமடைந்துள்ளது. ஆங்காங்கே, தார் பெயர்ந்து கற்கள் சிதறிக்கிடக்கின்றன. சாலை முழுவதும் பள்ளங்களாக உள்ளது. இப்பகுதிக்கு புதிய தார் சாலை அமைத்து தர வேண்டும்.
- மோகன், கே.கே.புதுார்.
குழந்தைகளை தாக்கும் நாய்கள்
இடையர்பாளையம், பூம்புகார் நகர், வைரவர் வீதியில் சாலையில் செல்வோரை தெருநாய்கள் துரத்தி அச்சுறுத்துகின்றன. குழந்தைகளை நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது. பலமுறை புகார் செய்தும் நடவடிக்கையில்லை.
- வள்ளி, இடையர்பாளையம்.
ஆக்கிரமிப்பால் நெருக்கடி
வெள்ளக்கிணறு, ரேஷன் கடை மற்றும் கருப்பராயன் கோவில் எதிரில் சாலையில் அதிகளவு ஆக்கிரமிப்பு உள்ளது. இதனால், குறுகிப்போன சாலையில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. கார், பள்ளி வேன் போன்ற வாகனங்கள், இவ்வழியே செல்லவே முடியவில்லை.
- வேலவன், வெள்ளக்கிணறு.
அடிக்கடி விபத்து
சவுரிபாளையம், அத்வைத் பள்ளி அருகே அதிவேகமாக வரும் வாகனங்களால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பாதுகாப்பில்லை. இப்பகுதியில், விபத்தை தவிர்க்க வேகத்தடை ஏற்படுத்தி தர வேண்டும்.
- செல்வராஜ், நரசிம்மபுரம்.
நோய் அபாயம்
பீளமேடு பேருந்து நிறுத்தம் அருகே, கால்வாயில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதில், கொசுப்புழுக்கள் உற்பத்தி அதிகமாக உள்ளதால், நோய் பரவும் அபாயம் உள்ளது. பயணிகள் நிற்க முடியாத அளவிற்கு, கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- ஜெகநாதன், பீளமேடு.
மூச்சை முட்டும் துர்நாற்றம்
நீலாம்பூர், மயிலம்பட்டி, பி.எம்.கார்டனில் நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன. குடியிருப்பு அருகே பேரூராட்சி சார்பில், குப்பை கொட்டி எரிக்கப்படுகிறது. எரிந்து வரும் கரும்புகையால், குடியிருப்பு வாசிகள் கண்ணெரிச்சல், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.
- ஜெயராம். நீலாம்பூர்.
காரால் இடையூறு
விளாங்குறிச்சி ரோடு, சேரன்மாநகர், சாந்தி டிபார்ட்மென்ட் ஸ்டோர் அருகே கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக கார் ஒன்று நிறுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இந்த காரை அகற்ற வேண்டும்.
- தங்கவேல், சேரன்மாநகர்.
தெருவிளக்கு பழுது
கோவை மாநகராட்சி, எட்டாவது வார்டு, நேருநகர், என்.ஜி.பி., நகர், 'எஸ்.பி -21 பி- 21' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக தெருவிளக்கு பழுதாகியுள்ளது. புகார் செய்தும் பலனில்லை.
- நாகராஜன், நேருநகர்.
இடிந்த சாக்கடை
காந்திபுரம், 68வது வார்டு, எட்டாவது வீதியில், சாக்கடை கால்வாயை சுத்தம் செய்வதற்கு சிலாப் அகற்றப்பட்டது. ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை சிலாப் மூடவில்லை. சாக்கடை கால்வாயின் ஓரங்களும் இடிந்து, குப்பை அடைத்து நிற்கிறது. இதனால், கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது.
- சீனிவாசன், காந்திபுரம்.