ADDED : செப் 01, 2026 06:53 PM
சோமனூர்: கைத்தறி கூடங்களுக்கு சோலார் பேனல் அமைக்க மானியம் வழங்குவது போல், விசைத்தறி கூடங்களுக்கும் வழங்க வேண்டும், என, விசைத்தறி கூட்டமைப்பினர் வலியுறுத்தி உள்ளனர்.
கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை மானிய கோரிக்கை அறிவிப்புகளை, அமைச்சர் விஜய் பாலாஜி சட்டசபையில் நேற்று அறிவித்தார். அதில், 1000 தனிநபர் கைத்தறி நெசவு கூடங்களில், சூரிய ஒளி மின் தகடுகள்( (சோலார் பேனல்) 100 அமைக்க, 100 சதவீத மானியம் வழங்கப்படும், என்பன உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் பூபதி கூறியதாவது:
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 1.50 லட்சம் விசைத்தறிகள் இயங்குகின்றன. 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
மின் கட்டணம் தான் விசைத்தறி தொழிலுக்கு பெரிய சவாலாக உள்ளது. ஆண்டுக்கு ஆறு சதவீதம் மின் கட்டண உயர்வும் சுமையாகி உள்ளது.
அதனால், மாற்று வழியாக சூரிய ஒளி மின் சக்திக்கு மாற பெரும்பாலான விசைத்தறியாளர்கள் தயாராக உள்ளனர். சோலார் பேனல் அமைக்கும் செலவு அதிகமாக உள்ளதால், தயங்க வேண்டிய நிலை உள்ளது. அதனால் தான், நெட் மீட்டருடன் சோலார் பேனல் அமைக்க மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். தற்போதைய தமிழக அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்தினோம். ஆனாலும், விசைத்தறி மேம்பாட்டுக்கான எந்த அறிவிப்புகளும் நேற்றைய மானிய கோரிக்கையில் இடம்பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. கைத்தறி கூடங்களுக்கு சோலார் பேனல் அமைக்க, 100 சதவீதம் மானியம் வழங்க உள்ளதை போல், விசைத்தறி கூடங்களுக்கும் மானியம் வழங்கி, தொழிலை தமிழக அரசு பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
