/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மின்தடையை கண்டுபிடிக்க மின்தடை: மக்கள் அவதி
/
மின்தடையை கண்டுபிடிக்க மின்தடை: மக்கள் அவதி
ADDED : நவ 13, 2025 09:47 PM
போத்தனுார்: கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட்டிலுள்ள பவர் ஹவுஸிலிருந்து, பிள்ளையார்புரம், ஹவுசிங் யூனிட், இந்திரா நகர், காமராஜர் நகர், கஸ்துாரி நகர், முதலியார் வீதி, திருமறை நகர், கருப்பராயன் கோவில் பகுதிகளுக்கு ஒரு பீடரிலிருந்து மின் வினியோகம் செய்யப்படுகிறது. இம்மின் தடத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. குறிப்பாக காலை நேரத்தில் மின்தடை ஏற்படுவது வழக்கமாகிவிட்டது.
பெண்கள் சமையலை முடிப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். பள்ளி, கல்லுாரி, அலுவலகம் செல்வோர் நிலையும் இதுவே.
இந்நிலையில் நேற்று மட்டும் ஏழு முறைக்கு மேல் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து பவர் ஹவுஸில் விசாரித்த போது, 'இக்குறிப்பிட்ட மின் வழித்தடத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. அதனை கண்டறிந்து சீரமைக்க இம்மின்தடை செய்யப்பட்டது' என்றனர்.
மின் வாரிய தலைமை பொறியாளரிடம் கேட்டபோது, ''பீடரில் ஏதேனும் பழுது ஏற்பட்டால் அதனை கண்டறிய மின்தடை செய்யப்படும். சில நேரங்களில் இன்சுலேட்டர் சேதமடைந்திருந்தாலும் இப்பிரச்னை ஏற்படும்.
அக்ரி பீடராக இருந்தாலும் பாதிக்கப்படும். ஆனால் இந்த பீடர் அக்ரியில் கிடையாது. மின்தடை ஏற்படும் காரணத்தை கண்டறிந்து விரைவாக சீரமைக்க ஏற்பாடு செய்யப்படும்,' என்றார்.

