/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் குறைபிரசவங்கள்! ஊட்டச்சத்து உணவு உண்டால் தவிர்க்கலாம்
/
டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் குறைபிரசவங்கள்! ஊட்டச்சத்து உணவு உண்டால் தவிர்க்கலாம்
டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் குறைபிரசவங்கள்! ஊட்டச்சத்து உணவு உண்டால் தவிர்க்கலாம்
டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் குறைபிரசவங்கள்! ஊட்டச்சத்து உணவு உண்டால் தவிர்க்கலாம்
ADDED : மே 17, 2025 04:59 AM
குழந்தை பேறு என்பது அவ்வளவு எளிதல்ல. 37 வாரத்திற்கும் குறைவாக பிறக்கும் குழந்தை பிறப்பு குறைபிரசவம் என கருதப்படுகிறது. டீன் ஏஜ், வயது முதிர்வு கர்ப்பத்தால் அதிகரிக்கும் குறை பிரசவங்களை தவிர்க்ககர்ப்ப காலத்தில் உரியபரிசோதனை செய்வதுடன்,ஊட்டச்சத்து உணவு உண்பதுஅவசியம்.
கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் நலப்பிரிவில் மாதந்தோறும், 300 முதல் 400 குழந்தைகள் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் சேர்க்கப்படுகின்றனர். அதில், 40 முதல் 60 சதவீதம் குழந்தைகள் குறைபிரசவத்தில் பிறந்தது என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் பிறந்து மேல் சிகிச்சைக்காகவும்கோவை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் குழந்தைகள் சேர்க்கப்படுகின்றனர்.
பிரசவ கால குழந்தைகள் இறப்புக்கு குறைபிரசவம் முக்கிய காரணமாக கூறப்படுகிறது. தமிழகத்தில், பிரசவ கால குழந்தைகள் இறப்புகளை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு துறைத்தலைவர் டாக்டர் சசிக்குமார் கூறியதாவது:
கருவில், 26 வாரத்துக்கு மேல் தான் நுரையீரல் விரிவடையும். 26 வாரம் முதல் 32 வாரம் வரையுள்ள குழந்தைகளை பல்வேறு சவால்களுக்கு மத்தியில் காப்பாற்றி நலமாக அனுப்பியுள்ளோம். பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவில் மாதந்தோறும் சிகிச்சை பெறும், 300-400 குழந்தைகளில், 40 முதல் 60 சதவீத குழந்தைகள் குறைபிரசவம் காரணமாக அனுமதிக்கப்படுகிறது.
குறை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல் முழுமையாக விரிவடையாததால் மூச்சுத்திணறல், மூளை சார்ந்த பிரச்னை, இதயத்தில் பி.டி.ஏ., எனும் பிரச்னை,கிட்னி பாதிப்பு, மஞ்சள் காமாலை, தொற்று நோய்கள், குடல் சார்ந்த நோய் என பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.
தற்போது, அரசு மருத்துவமனையில், ஒரு கிலோவுக்கும் குறைவாக பிறக்கும் குழந்தைகளில் 80 சதவீதம் பேரையும், 1.5 கிலோவுக்கு கீழ் பிறக்கும் குழந்தைகளை 94 சதவீதமும் காப்பாற்றிவிடுகிறோம். 500 கிராம் அதற்கு கீழ் எடையுடன் பிறக்கும் குழந்தைகளை ஒன்றும் செய்ய இயலாமல் போகிறது.
டீன் ஏஜ் கால பிரசவம், 35 வயதுக்கு மேல் பிரசவம், தாய்க்கு நோய் பாதிப்புகள் இருப்பது, கர்ப்பப்பை சார்ந்த பிரச்னைகள், ஊட்டச்சத்து குறைபாடு, சர்க்கரை, கர்ப்பகால சர்க்கரை, ரத்த சோகை, இருதய மற்றும் நுரையீரல் போன்ற நோய் பாதிப்பு, கர்ப்பப்பை வாய் அளவு குறைவு போன்ற காரணங்களால் குறைபிரசவம் ஏற்படுகிறது.
கர்ப்ப காலத்தில் உரிய பரிசோதனை செய்துகொள்ளவேண்டியதும், ஊட்டச்சத்து உணவுகளை உட்கொள்வதும் அவசியம். பிரச்னைகள் இருப்பது முன்கூட்டியே தெரியும் போது அதற்கேற்ப சிகிச்சைகளை பெற்றால், குறைபிரசவத்தை தவிர்க்கலாம்.
முதல் குழந்தை குறைபிரசவம் என்றால், இரண்டாம் குழந்தையும் குறைபிரசவத்தில் பிறக்க அதிக வாய்ப்புகள் உண்டு. 37 வாரத்திற்கு கீழ் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் குறைபிரசவமாக கருதுகின்றோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
-- நமது நிருபர் -